எல்லையில் பதற்றம்.. துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

India Pakistan Conflict : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எல்லையில் பதற்றம்.. துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

இந்திய ராணுவம்

Updated On: 

25 Apr 2025 08:59 AM

ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 25: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) அடுத்து, பாகிஸ்தான் ராணுவம் (India Pakistan Conflict) எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனால், எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை பகுதியில் சிறிய அளவிலான துப்பாக்கிச் சூடு தாக்குதல் பாகிஸ்தான் ராணுவம் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றத்தை கிளப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளமான பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் எனவும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறி வருகிறார்.

பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

பயங்கரவாதிகள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம் என கூறினார். இதனை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது. பாகிஸ்தான் விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியேற்றம், வாகா எல்லை மூடல், தூதர பாதுகாப்பு வாபஸ் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

அடுத்ததாக, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. ராணுவ முகாம்களை குறித்து வைத்து தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது நேரடியாக இருக்குமா அல்லது மறைமுகமாக இருக்குமா என்பது தெரியவில்லை. இதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா ராணுவம் ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தப்பியோடி பயங்கரவாதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர்.  எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதை அடுத்து, இந்தியா பதிலடி கொடுத்தாக தெரிகிறது.