பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. விசாரணையில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை!

National Investigation Agency Started Investigation in Pahalgam Attack | ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற கோடூர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை நேற்று (ஏப்ரல் 27, 2025) முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. விசாரணையில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை!

என்.ஐ.ஏ விசாரணை

Updated On: 

28 Apr 2025 07:38 AM

பஹல்காம், ஏப்ரல் 28 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) சம்பவத்தின் நேரடி சாட்சிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுன் வருகின்றனர். பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 27, 2025) விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஹல்காம் தாக்குதல் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை இந்த அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி சுற்றுலா பயணிகள் – உலகையே உலுக்கி கொடூர சம்பவம்

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பஹல்காம்  பகுதியில் இருந்த 2 வெளிநாட்டவர்கள் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கிய நிலையில், இந்தியாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரெண்ட் (The Resistance Front) அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது.

பஹல்காம் விவகாரத்தை கையில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஆட்டாரி – வாகா எல்லையை மூடியது. அதனை தொடர்ந்து சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கண்டறியும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தை மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை நேற்று (ஏப்ரல் 27, 2025) விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், முதற்கட்டமாக சம்பவ இடத்தில் இருந்த சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள், தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள், தாக்குதலை வீடியோ எடுத்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தேசிய புலனாய்வு முகமை கிடுக்குபிடி விசாரணையை முடுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.