Cabinet Committee Meetings: பிரதமர் மோடி தலைமையில் 3 முக்கிய கூட்டங்கள்.. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு கூடுகிறது அமைச்சரவை..!
Pahalgam Terror Attack: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் முக்கியமான அரசு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2025 ஏப்ரல் 30 அன்று, பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக்களின் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, முழு அமைச்சரவை கூட்டமும் நடைபெறும். இந்தக் கூட்டங்களில் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

டெல்லி, ஏப்ரல் 29: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் தொடர் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், நாளை அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பல முக்கியமான கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில், ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் அமைச்சரவை கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டமாக இது இருக்கும், ஆனால் அதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) பங்கேற்கும் மூன்று முக்கியமான குழுக்களின் கூட்டங்களும் நடைபெறும். இந்த மூன்று குழுக்களும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS), அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஆகியவற்றின் கூட்டங்கள் நடைபெறுகிறது. இதன்பிறகு, முழு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பாதுகாப்பு அமைச்சரவை குழு:
முதலாவதாக பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலாளர், பாதுகாப்பு, நிதி, வெளியுறவு மற்றும் உள்துறை செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு, எல்லை நிலைமை மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் குறித்து விரிவாத விவாதம் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு:
இதை தொடர்ந்து, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCPA) கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரசியல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ஜிதன் ராம் மஞ்சி, பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ராம் மோகன் நாயுடு, பூபேந்திர யாதவ், அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜ்ஜி பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் அரசியல் நிலைமைகள், தேர்தல் உத்திகள், மாநிலங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சாத்தியமான சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படலாம்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு:
தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொருளாதாரம் தொடர்பாக பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமை தாங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர், சிவராஜ் சிங் சவுகான், எச்டி குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், லலன் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அமைச்சரவைக் கூட்டம்:
இந்த 3 முக்கிய கூட்டங்களுக்கு பிறகு, நாளை அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முழு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. சமீபத்திய பயங்கரவாத சம்பவங்கள், வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.