பழைய சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? உஷார்! – மத்திய அரசின் அதிரடி முடிவு
Old SIM Users Alert: சில சிம் கார்டுகளில் உள்ள சிப்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டது.

மாதிரி புகைப்படம்
நாடு முழுவதும் மக்களின் பயன்பாட்டில் இருக்கும் பழைய சிம் கார்டுகளை (SIM Card) மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சில சிம் கார்டுகளில் உள்ள சிப்கள் சீனாவிலிருந்து (China) இறக்குமதி செய்யப்பட்டவை என தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஜியோ (Jio), ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதன் பிறகே பழைய சிம் கார்டுகளை மாற்றும் முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறை, சிம்கார்டுக்கான விதிகளை மாற்றி, நம்பிக்கைக்குரிய விற்பனையாளர்கள் மூலம்தான் சிம் கார்டுகள் வாங்கப்படவேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனாலும் சில விற்பனையாளர்கள் இந்த விதிகளை மீறி சீன சிப்களை உள்ளடக்கிய சிம்களை வழங்கியிருப்பது மேற்சொன்ன ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதனால், 2021க்கு முன் மற்றும் பின் விற்பனை செய்யப்பட்ட சில சிம் கார்டுகள் இந்த மாற்றத்திற்கு உட்பட வாய்ப்பு அதிகம். எனவே பயனர்கள் தங்கள் சிம் கார்டுகள் புதியதா, பழையதா என்பதை சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
எதற்காக இந்த மாற்றம்?
ஒருவேளை வாடிக்கையாளர்கள் இன்னும் பழைய சிம் கார்டுகளை பயன்படுத்தினால், இப்போது புதிய சிம் பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம். இது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கை என அரசு கருதுகிறது. இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் அரசால் அங்கீரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்தே சிம் கார்டுகளை வாங்குகின்றனர். அவர்கள் தைவான், வியாட்நாம் போன்ற நாடுகள் தயாரிக்கும் சிம் கார்டுகளை பெறுகின்றனர். அதில் ஒரு சிலர் சட்ட விரோதமாக சீனாவில் இருந்து சிம் கார்டுகளை வாங்கியிருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்
இது மாதிரியான சிம்கார்டு மாற்ற நடவடிக்கைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆதார் இருந்தால் மட்டுமே சிம்கார்டுகள் வழங்கும் முறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அரசின் இந்த முடிவு சாதாரண மக்கள் முதல் தொழில்துறையினர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய சிம் கார்டுகளை பெற மக்கள் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அரசு விரைவில் தெளிவான வழிகாட்டுதல்களையும் திட்டமிட்ட நடைமுறையையும் வெளியிட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.