நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
NEET Hall Ticket Released : 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகிறது. நீட் தேர்வானது வருகிற மே 4 ஆம் தேதி வெளியாகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று டவுன்லோடு செய்துகொள்ள முடியும். அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நமது நாட்டில் மருத்துவத்துறையில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நீட் (NEET – National Eligibility cum Entrance Test) என்பது மிக முக்கியமான நுழைவுத்தேர்வாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். மருத்துவக் கல்லூரிகளில் (MBBS, BDS, உட்பட) சேர்வதற்கான ஒரே வாயிலாக நீட் தேர்வு அமைந்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) இந்த தேர்வை நடத்துகிறது. மாணவர்களின் அறிவுத் திறன், அறிவியல் அறிவு மற்றும் ஆய்வுத் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த தேர்வு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கனவுள்ள மாணவர்கள் நாடு முழுவதும் இந்த தேர்வுக்காக கடுமையாக தயாராகி வருகின்றனர். 2 அல்லது 3 வருடங்களாக தொடர்ந்து முயற்சி செய்து தேர்ச்சி பெற்றவர்களும் உண்டு.
இந்த ஆண்டு மே 4, 2025 அன்று நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் ஏப்ரல் 30, 2025 அன்று வெளியாகியுள்ளது. ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பார்க்கலாம்.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி ?
- நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய விரும்பும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- முதன்மை பக்கத்தில் உள்ள NEET UG 2025 Admit Card என்பதற்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண்ணை மற்றும் பிறந்த தேதி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை சரியாக பதிவிட வேண்டும்.
- பின்னர் செக்யூரிட்டி பின்னை பதிவிட வேண்டும்.
- ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்த பிறகு அதில் உள்ள தகவல்கள் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பரிசோதனை செய்யவும்.
- அதில் தவறுகள் இருந்தால் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளவும்.
ஹால் டிக்கெட்டில் சரிபார்க்க வேண்டிய முக்கிய விவரங்கள்
-
மாணவரின் பெயர், பதிவு எண், பிறந்த தேதி, விண்ணப்ப ஐடி.
-
பாலினம், பெற்றோர்கள் விவரங்கள்.
-
தேர்வு தேதி மற்றும் நேரம்.
-
தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி.
-
கேள்வித்தாளின் மொழி.
-
புகைப்படம் மற்றும் கையொப்பம்.
-
டிரஸ் கோட் விவரங்கள்
மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் ஒரு தேர்வாக நீட் தேர்வு இருந்து வருகிறது. 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கல்வி முறை இருப்பதால் பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவது என்பது சவாலான பணியாகவே இருந்து வருகிறது. பல மாணவர்கள் 10 ஆம் வகுப்பு முடிந்த பிறகு தனியார் நீட் பயிற்சிக்கு சென்று நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆண்டுக்கு லட்சக் கணக்கான மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள். மற்ற மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளுக்காக மீண்டும் படித்து தயாராகி வருகின்றனர்.