வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த மனைவி.. பிரபல யூடியூபர் கைது..
Home Birth: கேரளா மாநிலத்தில் பிரபல யூடியூபர் சிராஜுதீன் தனது மனைவி அஸ்மாவிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேரளா போலீசார் பிரபல யூடியூபர் சிராஜுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோப்பு புகைப்படம் (pic courtesy: pixabay)
கேரளா, ஏப்ரல் 09: கேரளா மாநிலத்தில் பிரபல யூடியூபர் சிராஜுதீன், மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கோடூரை சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் யூடியூபில் மத போதகராக இருந்து வருகிறார். மேலும், வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பாக ஆதரவாக பேசி வருகிறார். இதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் சிராஜுதீன், மனைவி அஸ்மாவிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அஸ்மாவிற்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டிலேயே பிரசவம் – உயிரிழந்த மனைவி அஸ்மா:
யூடியூபர் சிராஜுதீன் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கு ஆதரவாக பேசி வருகிறார். அந்த வகையில், பிரபல யூடியூபர் சிராஜுதீன் மனைவி அஸ்மாவிற்கு முதல் இரண்டு பிரசவம் மட்டும் மருத்துவமனையில் நடந்துள்ளது. அடுத்த 2 பிரசவமும் வீட்டிலேயே நடந்துள்ளது. இந்நிலையில், அவரது மனைவி அஸ்மா 5வது முறையாக கருவுற்று இருந்தார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4, 2025) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில், மூன்றாவது முறையும் வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். மேலும் அவர் ஆசைப்பட்ட படியே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் குழந்தை பிறந்த உடன் அஸ்மாவிற்கு கடுமையான வலியுடன் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மனைவி அஸ்மா கெஞ்சி கேட்டும் சிராஜுதீன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். சுமார் 3 மணி நேரம் வலியுடன் போராடிய அஸ்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட சிராஜுதீன் அதிர்ந்து போயுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரியாத வகையில் சீராஜுதீன் கவனமாக இருந்துள்ளார்.
யூடியூபர் சிராஜுதீன் கைது:
ஆனால் அக்கம் பக்கத்தினர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய, நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது வீட்டில் பிரசவம் பார்த்ததன் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா 105 மற்றும் 238 (கொலைக்கு குற்றம் மற்றும் ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்மாவிற்கு 5 வதாக பிறந்த ஆண் குழந்தை தற்போது தனியார் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகுந்த நேரத்தில் அஸ்மாவிற்கு மருத்துவ உதவி செய்யாமல் வேண்டுமென்றே உயிரிழக்கச் செய்ததாக கூறி அஸ்மாவின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் சிராஜுதீன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.