‘நான் அக்பரின் வாரிசு… தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது’ – உரிமை கோரிய நபரால் பரபரப்பு
தான் முகலாய மன்னர்களின் வாரிசு எனவும் தன் பெயர் மன்னர் யாகூப் ஹபீபுதீன் துசி எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, தாஜ்மஹால், ராமர் கோவில் ஆகியவை தனக்கு சொந்தமானது என ஒருவர் கிளம்பியிருக்கிறார். ஹைதராபாத்தை சேர்ந்த யாகூப் தான் முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரின் நேரடி வாரிசு எனவும் தன்னை குறிப்பிடுகிறார்.

தாஜ் மஹால்
இந்திய வரலாற்றில் முகலாயர்களின் பங்கு மிக முக்கியமானது. முகலாயர்கள் இந்தியாவின் முக்கியமான அரசியல், கலாச்சார மற்றும் சமூக மாற்றங்களை உருவாக்கிய பேரரசர்களாகும். முகலாய பேரரசு (Mughal Empire ) 1526 முதல் 1857 வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி காலத்தில் இந்தியாவின் நிர்வாகம், கட்டிடக்கலை, கலாசாரம், சமூக அமைப்பு ஆகியவை புதிய பரிணாமங்களை அடைந்தன. இந்த நிலையில் இந்தியாவில் முகலாயர்கள் குறித்து பெரும் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிராவில் (Maharashtra) ஔங்கரசீப் (Aurangzeb) கல்லறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளன. அவர் இந்து கோவில்களை இடித்தார், கட்டாய மதமாற்றங்களை மேற்கொண்டார் என இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மற்றொரு பக்கம் தான் முகலாய மன்னர்களின் வாரிசு எனவும் தன் பெயர் மன்னர் யாகூப் ஹபீபுதீன் துசி எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, தாஜ்மஹால், ராமர் கோவில் ஆகியவை தனக்கு சொந்தமானது என ஒருவர் கிளம்பியிருக்கிறார். ஹைதராபாத்தை சேர்ந்த யாகூப் தான் முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரின் நேரடி வாரிசு எனவும் தன்னை குறிப்பிடுகிறார். மேலும் ஔரங்கசீப், அக்பர் போன்ற மன்னர்கள் தனது முன்னோர்கள் என அவர் குறிப்பிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
தாஜ்மகால், அயோத்தி ராமர் கோயில் மீது உரிமைகோரிய யாகூப்
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தியின் அடிப்பைடையில் யாகூப் ஹபீபுத்தீன் துசி தான் முகலாய வம்சத்தின் இளவரசர் எனவும் தன்னை ஆறாம் தலைமுறை வாரிசு என குறிப்பிடுகிறார். மேலும் தான் ஔரங்கசீப், ஷாஜகான், அக்பர் போன்ற முகலாய அரசர்கள் தனது முன்னோர்கள் எனவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் வசிக்கும் இவர், அவுரங்கசீப்பின் சமாதிக்கான பராமரிப்பாளர் பணிகளை மேற்கொள்ளும் உரிமையும் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஔரங்கசீப்பின் சமாதி சேதப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு யாகூப் மனு அனுப்பி, அரசு இந்த நினைவு சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்திருக்கிறார். இவர் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நினைவு சின்னமான தாஜ்மகாலை சொந்தம் கொண்டாடினார். அதன் பிறகு இவர் நாடு முழுவதும பிரபலமாக அறியப்பட்டார்.
இதே போல சுல்தானா பேகம் என்பவர் தான் பகதூர் ஷா ஜாபரின் கொள்ளுப் பேத்தி எனவும் தான் வறுமையில் வாழ்ந்து வருவதால் தனக்கு அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டில், அவர் ஓய்வூதியம் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்க செய்திருந்தார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில், கொல்கத்தாவைச் சேர்ந்த சையத் முகமது ஹைதர் என்பவர், அவத் அரசின் கடைசி அரசரான வாஜித் அலி ஷாவின் உண்மையான வாரிசு என்று கூறிய சம்பவமும் நடந்தது. இருப்பினும் அவரது உரிமை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இப்படி பலர் தாங்கள் இந்தியாவை ஆட்சி செய்த புகழ் வாய்ந்த அரசர்களின் வம்சாவளி என கூறிக்கொண்ட சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மேலும் வரலாற்று நினைவு சின்னங்கள் மீது பலர் உரிமை கோரினாலும், அதில் பெரும்பான்மையானவை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவே இல்லை. காரணம் இது போன்ற கூற்றுக்களை நிரூபிக்க அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் வலுவான வரலாற்று ஆவணங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.