”ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்படுவார்கள்” காஷ்மீர் தாக்குதல்.. கொதித்தெழுந்த பிரதமர் மோடி!

PM Modi On Pahalgam Terror Attack : பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும் என்றும், பயங்கரவாதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

”ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்படுவார்கள் காஷ்மீர் தாக்குதல்.. கொதித்தெழுந்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

Updated On: 

24 Apr 2025 14:02 PM

பீகார், ஏப்ரல் 24: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள்  (Pahalgam Terror Attack) நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பிரதமர் மோடி அதுகுறித்து பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நாட்டின் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்றனர்.

”ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்படுவார்கள்”

இந்த சம்பவத்திற்குப் பிறகு நாடு சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். பயங்கரவாதிகள் தப்பவிடப்பட மாட்டார்கள். அவர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனை கடுமையானதாகவும் இருக்கும்.

பயங்கரவாதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும். இன்று, பீகார் மண்ணில், முழு உலகிற்கும் நான் கூறுகிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்டுபிடித்து தண்டிக்கும்.

இந்தியாவின் ஆன்மா பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதியில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது.

கொதித்தெழுந்த பிரதமர் மோடி


மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், எங்களுடன் நின்ற அவர்களின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த பயங்கரவாதிகளுக்கும் இந்த தாக்குதலுக்கு சதி செய்தவர்களுக்கும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தண்டனை கிடைக்கும் என்பதை நான் மிகத் தெளிவாக கூற விரும்புகிறேன்” என்று கூறினார்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் இந்த தாக்குதல் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, தாக்குதலில் உயிர் பிழைத்த மக்கள் அளித்த தகவலின்பேரில், மூன்று பயங்கரவாதிகளின் வரைபடத்தை பாதுகாப்பு  படை தயாரித்து வெளியிட்டு இருந்தது.  அதன்பிறகு, பயங்கரவாதிகள் நான்கு பேரின் புகைப்படங்களும் வெளியானது. இதன் அடிப்படையில், அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.  இதனால், ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.