Indian Justice Report 2025: இந்திய நீதி அறிக்கை 2025.. முன்னேறிய தென்மாநிலங்கள்!

'இந்தியா நீதி அறிக்கை 2025'ல் தெரிவிக்கப்பட்டதன்படி, நீதித்துறை மற்றும் காவல்துறை அமைப்புகளில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படும் அதே வேளையில், வட இந்திய மாநிலங்கள் பின்தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்த அறிக்கை, நீதி வழங்கும் திறனில் மாநிலங்களை தரவரிசைப்படுத்துகிறது.

Indian Justice Report 2025: இந்திய நீதி அறிக்கை 2025.. முன்னேறிய தென்மாநிலங்கள்!

இந்திய நீதி அறிக்கை

Published: 

15 Apr 2025 17:32 PM

“இந்திய நீதி அறிக்கை 2025” வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீதித்துறை மற்றும் காவல்துறை அமைப்பில் கர்நாடகா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ள நிலையில் வட மாநிலங்கள் மோசமாக செயல்பட்டுள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. நீதி வழங்கும் திறனுக்கான வருடாந்திர தரவரிசையில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. இந்த மாநிலங்கள் தங்கள் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ‘இந்தியா நீதி அறிக்கை 2025’ குறிப்பிட்டுள்ளது. 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் (ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்) கர்நாடகா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சிறப்பாக செயல்படும் தென் மாநிலங்கள்

காவல்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் மாநிலங்களின் வலிமையின் அடிப்படையில் IJR தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் இருந்தது, இந்த ஆண்டும் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசம், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் பதினொன்றாவது இடத்தில் இருந்த தெலுங்கானா, இந்த முறை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஐஜேஆர் தரவரிசையில் பின்தங்கிய மாநிலங்கள்

சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், கேரளாவும் தமிழ்நாடும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்விரு மாநிலங்களும் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது என்று அறிக்கை கூறியது. நடுத்தர மாநிலங்களான சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவை நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. முன்பு முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா, இந்த முறை தரவரிசையில் சரிவைக் கண்டுள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மோசமாக செயல்பட்டதாக அறிக்கை கூறியுள்ளது.

பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் சிறிய மாற்றங்களுடன் கடைசி இடத்தில் உள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது. கடந்த முறை கடைசியாக இருந்த உத்தரப் பிரதேசம், இந்த முறை ஒரு இடம் முன்னேறியுள்ளது, அதே நேரத்தில் மேற்கு வங்கம் கடைசி இடத்தில் உள்ளது.இந்திய நீதி அறிக்கையை டாடா டிரஸ்ட்ஸ் வெளியிட்டது, முதல் தரவரிசை 2019 இல் வெளியிடப்பட்டது. இது அறிக்கையின் நான்காவது பதிப்பாகும்.

குறிப்பிடத்தக்க விஷயங்கள்

இந்த ஆண்டறிக்கை, காவல் துறையில் பின்தங்கிய சமூகங்களின் பிரதிநிதித்துவம் முதல் இந்தியாவில் காவல்துறையின் ஒட்டுமொத்த நிலை வரை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் அதிகாரி மட்டத்தில் 28 சதவீத பதவிகள் காலியாக உள்ளதாகவும், கான்ஸ்டபிள் மட்டத்தில் 21 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப்படி 1 லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது 222 போலீசார் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் காவல்துறையினரின் எண்ணிக்கை இந்த அளவில் மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 120 போலீசார் மட்டுமே உள்ளனர். காவல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசினால், நிலைமை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவில் சுமார் 20 லட்சம் போலீசார் உள்ளனர். இவர்களில் பெண் காவல்துறையினரின் எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 835 ஆகும். ஆனால், உயர் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 960 பேர் தான். அதேசமயம் டிஐஜி, டிஜி, ஐஜி, கூடுதல் எஸ்பி மற்றும் துணை ஆணையர் பதவிகளில் நியமிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையைச் சேர்த்தால், அது 4,940 ஆக உள்ளது.

இந்திய நீதி அறிக்கையைத் தயாரித்தவர்கள், காவல் துறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்துப் பதவிகளும் நிரப்பப்பட்டதாக எந்த மாநிலத்தையும் குறிப்பிடவில்லை. காவல் துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களின் பிரதிநிதித்துவம் சுமார் 59 சதவீதமாக உள்ளது. காவல் துறையில் பட்டியல் சாதியினரின் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை 12 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், தரவரிசையில் நிறைய சமத்துவமின்மை உள்ளது தெரிய வந்திருக்கிறது.