ஆதார் விவரங்கள் சட்டவிரோதமாக மாற்றம் – தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நடந்த மோசடி- பரபரப்பு சம்பவம்
Aadhaar Scam Exposed: இதற்காக தமிழ்நாடு, கேரளா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி போன்ற 15 மாநிலங்களில் 300 பேர் முகவர்களாக செயல்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆதார் கார்டில் சட்ட விரோதமாக தனது விவரங்களை மாற்ற விரும்புபவர்களை கண்டறிந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள குழுவுக்கு தகவல் தெரிவிக்கும்.

ஆதார் கார்டு மோசடி
டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாளமாக திகழ்வது ஆதார் (Aadhaar Card). நமது பெயர், முகவரி போன்றவற்றை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதார் இருக்கறது. பெயர், பிறந்த தேதி தொடங்கி நம் கை ரேகை வரை நமது அனைத்து முக்கியமான விவரங்களும் ஆதாரில் உள்ளது. அரசு, தனியார் என எல்லா இடங்களிலும் முக்கிய ஆவணமாக ஆதார் பயன்படுகிறது. வங்கி கணக்கு (Bank) தொடங்கி, அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, வருமான வரி தாக்கல் செய்ய, மொபைல் சிம் வாங்குவதற்கு போன்ற முக்கியமான சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. இப்படி நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட ஆதார் தொடர்பான மோசடிகளும் ஆங்காங்கே அரங்கேறி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஆதாரை மிகவும் பாதுகாப்பாக கையாள்வது அவசியம்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு கும்பல் 12 மாநிலங்களில் 1500க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளின் விவரங்களை மாற்றியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் படி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் ஒரு கும்பல் ஆதார் கார்டுகளில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் போன் நம்பர் போன்ற முக்கிய விவரங்களை சட்ட விரோதமாக மாற்ற விரும்புபவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் விவரங்களை மாற்றி தந்திருக்கிறது.
12 மாநிலங்களில் நடந்த மோசடி
இதற்காக தமிழ்நாடு, கேரளா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி போன்ற 15 மாநிலங்களில் 300 பேர் முகவர்களாக செயல்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆதார் கார்டில் சட்ட விரோதமாக தனது விவரங்களை மாற்ற விரும்புபவர்களை கண்டறிந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள குழுவுக்கு தகவல் தெரிவிக்கும் அவர்கள் மேற்சொன்ன நபரின் விவரங்களை கேட்டறிந்து அதற்கு ஏற்ப போலி ஆவணங்களை தயார் செய்து ஆதாரில் மாற்றம் செய்து அளிக்கின்றனர்.
மோசடி நடந்தது எப்படி?
இதற்காக ரூ.2000 முதல் ரூ.5000 வரை பணம் பெறுகின்றனர். இந்த குழுவுக்கு ஆஷிஷ் குமார் என்பவர் மூளையயாக செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. ஆதார் தளம் போல செயல்படும் போலி இணையதளம் ஒன்றை ஆஷிஷ் குமார் உருவாக்கியிருக்கிறார். இதன் முலம் பயனர்கள் மாற்ற விரும்பும் விவரங்களை கேட்டறிந்து அவருக்கு போலியான சான்றிதழ்களை உருவாக்கியிருக்கி கொடுத்திருக்கிறார். மேலும் இந்த குழுவினர் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) அமைப்பின் பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி, நாம் அளிக்கும் கண், கை ரேகை போன்ற அடையாளங்களை போலியாக உருவாக்கி ஆதார் விவரங்களை மாற்றியமைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் போலியான பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், ரேசன் கார்டு போன்றவற்றையும் உருவாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஆஷிஷ் குமார், தர்மேந்திர சிங் ஆகியோர் மீது மோசடி, அடையாளத் திருட்டு போன்ற பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.