Hair loss Scam Hyderabad: வழுக்கை மறைய ஆசை! மொட்டை அடித்து லோஷன் தடவிய சலூன்! பக்க விளைவால் இளைஞர்கள் பாதிப்பு!
Fake Hair Growth Lotion: தொடக்க காலத்தில் வக்கீல் தனது தலைமுடி சிகிச்சை முறையை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளார். இத பதிவுகள் வைரலானதை தொடர்ந்து, ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் சலூனுக்கு தினமும் வர தொடங்கியுள்ளனர்.

முடி வளர போலி சிகிச்சை
ஹைதராபாத், ஏப்ரல் 8: இன்றைய நவீன காலத்தில் பல இளைஞர்களுக்கு விரைவாகவே தலை முடி கொட்டி வழுக்கை (Bald) விழும் சூழல் நிலவி வருகிறது. இதில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ள ஏராளமான இளைஞர்கள் முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant), விக் மற்றும் பல்வேறு ஆயுர்வேத மருந்துகளை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில், இதேபோல் ஹைதராபாத்தில் முடியை மீண்டும் பெற வேண்டும் என்ற ஆசையில் முடி வளரும் லோஷனை பயன்படுத்திய பல இளைஞர்கள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மேலும் சில இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது.?
ஹைதராபாத்தை அடுத்த ஃபதே தர்வாசா சாலையில் உள்ள பிக் பாஸ் சலூன் என்ற கடையில் வேலை பார்க்கும் வக்கீல், தன்னிடம் சிறப்பு லோஷன் ஒன்று உள்ளது என்றும், இதை பயன்படுத்தினால் நன்றாக முடி வளரும் என்று விளம்பரப்படுத்தியுள்ளார். இதை நம்பி வரும் இளைஞர்களுக்கு முதலில் தலையை மொட்டையடித்து, பின்னர் ஒரு பிரஸை கொண்டு மக்களின் தலையில் வெள்ளை நிறத்திலான லோஷனை போட்டுள்ளார். பின்னர், இதை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஷாம்பு, சோப்பு அல்லது ஹேர் ஆயிலை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த மருந்து அடுத்த சில மணிநேரத்தில் அதன் பக்க விளைவை காட்ட தொடங்கியுள்ளது.
அலை மோதிய கூட்டம்:
தொடக்க காலத்தில் வக்கீல் தனது தலைமுடி சிகிச்சை முறையை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளார். இத பதிவுகள் வைரலானதை தொடர்ந்து, ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் சலூனுக்கு தினமும் வர தொடங்கியுள்ளனர். மேலும், தினமும் பல இளைஞர்கள் கார்களிலும், ஆட்டோ ரிக்ஷாக்களிலும் வரவே, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது உள்ளூர்வாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வக்கீல் தனது சலூனுக்கு அருகில் இருந்த ஒரு காலியான இடத்தில் தார்பாய் கட்டி, 2 நாற்காலிகளை போட்டு சிகிச்சை அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வரை இந்த வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில்தான், லோஷனைப் பயன்படுத்திய பிறகு சிலருக்கு சொறி ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளர். . இந்தச் செய்தி பரவி, அது வக்கீலை எட்டவே, எங்கே கைதாகி விடுவோமோ என்ற பயத்தில், சலூன் கடையை மூடிவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து இதுவரை யாரிடமிருந்தும் எந்த புகாரும் வரவில்லை என்று காலாபத்தர் போலீசார் தெரிவித்தனர்.
உள்ளூர்வாசி சொன்னது என்ன..?
போலியான சிகிச்சை முறை குறித்து முகமது தாஜூதீன் கூறுகையில், ”தினமும் 100 முதல் 150 பேர் லோஷன் தடவ வரிசையில் நின்றார்கள். தலையை மொட்டையடிக்க ரூ. 100 வசூலித்த அந்த நபர், லோஷன் இலவசம் என அப்ளை செய்துள்ளார். லோஷனுக்கு பணம் வசூலித்தால் எந்த பலனும் இருக்காது என்று தெரிந்து, இத்தகைய ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.