சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. நேஷனல் ஹெரால்ட் வழக்கு பின்னணி என்ன?
National Herald Case: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் பாஜகவின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு, ஏப்ரல் 17: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடிக்க தொடங்கி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு பின்னணி என்ன?
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையானது ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இது அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சார்பில் இயங்கப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காலக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்திற்காக தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை குரல் கொடுத்து வந்தது. இதன் காரணமாக 1942 ஆம் ஆண்டு இந்து பத்திரிகை ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1945 ஆம் ஆண்டு இந்த நாளிதழ் செயல்முறைக்கு வந்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டு இந்த பத்திரிக்கை பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல் இந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இணையதளத்தில் மட்டும் செயல்படும் வகையில் கொண்டுவரப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டபோது அதன் பங்குகள் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு கை மாறியது. யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோரை உறுப்பினராக கொண்டது. முக்கியமாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இந்த நிறுவனத்தில் 38 சதவீத பங்குகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது
அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடன் வழங்கப்பட்டது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாறியது. அதாவது அந்த நிறுவனம் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் வசமானது.
இதன் மூலம் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின் 2000 கோடி மதிப்பிலான சொத்துகள் முறைகேடாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி புகார் அளித்திருந்தார்.
அதாவது இந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு வழ்க்கு விசாரணையின் போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை விசாரித்த அமலாக்கத்துறையினர் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வர்த்தக அடிப்படையில் தான் மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த விஷயத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்:
இது ஒரு பக்கம் இருக்க 2023 ஆம் ஆண்டு ரூபாய் 751 கோடி மதிப்பிலான யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில் தற்போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இது ஆளும் பாஜக கட்சியின் சூழ்ச்சிதான் என்றும் இது வேண்டுமென்றே பழிவாங்கும் செயல் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் பெரும்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை நீதிபதி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.