படிப்பு மட்டும் போதாது, திறனை வளர்த்துக்கோங்க – புலம்பும் டெல்லி மாணவி – என்ன காரணம் தெரியுமா?

Skill is the key: கல்லூரியில் முதலிடம், 50 சான்றிதழ்கள், 10க்கும் மேற்பட்ட மெடல்கள் என இவ்வளவு இருந்தும் தனக்கு இன்டர்ன்ஷிப் கிடைக்கவில்லை என டெல்லி மாணவி ஒருவர் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவருக்கு கல்வி மட்டுமே போதாது எனவும் குறிப்பிட்ட துறையில் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

படிப்பு மட்டும் போதாது, திறனை வளர்த்துக்கோங்க - புலம்பும் டெல்லி மாணவி - என்ன காரணம் தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

19 Apr 2025 19:25 PM

இந்தியாவில் (India) கல்வி என்பது  குழந்தைகளின் எதிர்காலத்திற்கான வலிமையான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. மாநில அளவிலான அதிக மதிப்பெண்கள், சான்றிதழ்கள் போன்றவை ஒரு மாணவரின் வெற்றிக்கான அடையாளங்களாகக் கருதப்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பை பெற அதிக மதிப்பெண்கள் மட்டும் போதாது. குறிப்பிட்ட துறையில் போதிய திறன் பெற்றிருக்க வேண்டும். தற்போது அதிக ஊதியம் வழங்கக் கூடிய துறைகளான ஏஐ, டேட்டா சைன்ஸ் (Data Science), டிஜிட்டல் மார்கெட்டிங் (Digital Marketing) போன்றவை தற்போது பெரும்பாலான இந்திய கல்லூரிகளில் பாடங்களாக இல்லை. அதனை நீங்கள் தனியாக தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியைச் சேர்ந்த பிஸ்மா என்ற பெண்ணுக்கு நடந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பயிலும் மாணவி பிஸ்மா தனது லிங்க்ட் இன் பதிவில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் நான் டாப்பர், ஆனால் எனக்கு இன்டர்ன்ஷிப் கிடைக்கவில்லை. 50க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 10க்கும் மேற்பட்ட மெடல்கள் வைத்திருக்கிறேன். ஆனால் நான் எவ்வளவு முயன்றும் இன்டர்ன்ஷிப் கிடைக்கவில்லை.

மதிப்பெண்கள் மட்டும் போதாது

படிப்பு மட்டும் ஒருவருக்கு போதாது. ஆனால் ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார். திறன்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. மேலும் எனது பெற்றோர்களும், ஆசிரியர்களும் என்னை நன்றாக படிக்க சொன்னார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் பதில் சொல்கிறவர்களை விட ஒரு வேலையை செய்து காட்டுகிறவர்களுக்கு தான் மதிப்பு. நான் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு திறமையை தேர்வு செய்யுங்கள். அதில் நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். நமது மதிப்பெண்கள் கல்லூரிகளுக்கு மட்டுமே முக்கியம். ஆனால் நிறுவனங்களுக்கு நமது திறமையே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

திறமையின்மையால் 600 பேரை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனம், அந்த நிறுவனத்தின் மைசூர் அலுவலகத்தில் மூன்று முறை நடத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வில் தோல்வியடைந்த 600 புதிய பணியாளர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடைமுறை 20 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. ஒரு பணியாளர் மூன்று முறைக்கும் மேல் தோல்வியடைந்தால் அவர்களால் பணியில் தொடர முடியாது. இத்தகைய சம்பவங்கள் ஒரு மாணவருக்கு கல்லூரி படிப்பு மட்டும் போதாது. தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்வதே அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

இந்தியாவில் பட்டதார்களில் 50 சதவிகிதத்துக்கும அதிகமானோர் வேலைக்கு போதிய திறனில்லாமல் இருப்பதாக இந்திய ஸ்கில்ஸ் ரிப்போர்ட் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக கம்யூனிகேசன், பிரச்னைகளை தீர்க்கும் திறன், தொழில்நுட்ப அறிவு குறைவு ஆகியவை அதிகமானோரிடம் இருக்கிறது. பல இன்ஜனியரிங் மாணவர்களுக்கு எக்செல் கூட தெரியவில்லை.