பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்.. மாநில முதலமைச்சர்களுக்கு அமித்ஷா வலியுற்றுத்தல்!

Amit Shah Contacted All State Chief Ministers | இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களையும் தொடர்புகொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்.. மாநில முதலமைச்சர்களுக்கு அமித்ஷா வலியுற்றுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா

Updated On: 

25 Apr 2025 15:13 PM

சென்னை, ஏப்ரல் 25 : பாகிஸ்தானியர்களை (Pakistani’s) அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா (Home Minister Amit Shah) வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில முதலமைச்சர்களையும் தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்ட பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளதாகவும் கூறாப்படுகிறது. பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சுமூகமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், அமித்ஷாவின் இந்த உத்தரவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காமில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 26 சுற்றுலா பயணிகள்

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத அமைப்பு ஒன்று துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 17-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்மு & காஷ்மீரில் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அதிரடி காட்டும் இந்திய அரசு

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 24, 2025) உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. மேலும் மருத்துவ விசா மூலம் இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 29, 2025 அன்று முதல் ரத்து செய்யப்படும் என அறிவித்தது. இதன் காரணமாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

முதலமைச்சர்களை தொடர்புக்கொண்டு பேசிய அமித்ஷா

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 25. 2025) அனைத்து மாநில முதலமைச்சர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதலமைச்சர்களை அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.