ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து.. இந்திய அரசு திட்டவட்டம்!
Pakistani's visas will be suspended from 27 April 2025 | ஜம்மு மற்றும் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 27, 2025 முதல் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல் 24 : பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு வழங்கிய அனைத்து விசாக்களும் (Indian Government Visa) ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry of External Affairs) கூறியுள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து (Visa Cancellation) குறித்து முக்கிய தகவல்களை கூறியுள்ளது. முன்னதாக இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள்
இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu & Kashmir) உள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் பயங்கரவாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் உட்பட 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து – இந்திய அரசு அறிவிப்பு
ஜம்மு & காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அட்டாரி – வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவில் வாழும் பாகிஸ்தானியர்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானியர்களை வெளியேற கூறிய இந்திய அரசு
BREAKING – India orders all Pakistani citizens to leave by April 29. Indian nationals currently in Pakistan are advised to return to India at the earliest: Indian ministry of external affairs
— Insider Paper (@TheInsiderPaper) April 24, 2025
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சரசை குழு எடுத்த முடிவுகளின்படி, பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கி அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்களும் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதற்குள்ளாக இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.