இந்த ஆண்டில் மட்டும் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்? அதிர்ச்சி தகவல்
கடந்த 2024 ஆம் ஆண்டு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களை கையாள்வதற்காக வலுவான நெறிமுறைகளை அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. இதன் காரணமாக பொய்யான வெடி குண்டு மிரட்டல் அழைப்புகள் குறித்து சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதற்காக சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விமான நிலையங்கள் (Airport), பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு வெடி குண்டு மிரட்டல் விடப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி நடைபெற்று வருகின்றன. ஜனவரி தொடங்கி மார்ச், 2025க்குள் சென்னையில் (Chennai) உள்ள சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருக்கும் ஆபத்துகள் காரணமாக முறையான சோதனை செய்வது அவசியமாகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஜனவரி 8, 2025 அன்று இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை விடுக்கப்பட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் அது வதந்தி என தெரியவந்தது. இதே போல கடந்த பிப்ரவரி, 2025ன் போதும் சென்னை அண்ணா நகர், ஜேஜே நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடபட்டது. காவல்துறையினரின் சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச், 2025 வரை பல்வேறு விமான நிறுவனங்களுக்கு 24 முறை வெடி குண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை போலியானவை என கண்டறியப்பட்டிருக்கிறது. சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு (Bureau of Civil Aviation Security) வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 2022 ஆண்டு முதல் மார்ச் 25, 2025 வரை 836 பொய்யான வெடி குண்டு மிரட்டல் அழைப்புகள் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 13 வெடி குண்டு மிரட்டல் அழைப்புகளும் , 2023 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை சற்று உயர்ந்து 71 வெடி குண்டு மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 728 அழைப்புகள் வந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களை கையாள்வதற்காக வலுவான நெறிமுறைகளை அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. இதன் காரணமாக பொய்யான வெடி குண்டு மிரட்டல் அழைப்புகள் குறித்து சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதற்காக சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. அதாவது வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக ஒரு குழு உருவாக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு விமான நிலையத்திலும் பணியில் இருப்பார்கள். அவர்கள் இதுபோன்று வரும் அழைப்புகளை ஆராய்ந்து அதன் உண்மை தன்மை குறித்து கண்டறிவார்கள். அதன் பிறகு அந்த குழு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்.
மேலும் இதுதொடர்பாக பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காகவும் விமானப் போக்குவரத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கும் விமான நிலைய பாதுகாப்பு கட்டமைப்பை வலுவானதாக மாற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.