அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் – தடுப்பது எப்படி?

Glaucoma disease: கிளெளகோமா எனும் கண் அழுத்த நோய் அறிகுறிகளே இல்லாமல் தோன்றி பார்வையை இழக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதன் பாதிப்பை கண்டறிவது எப்படி மற்றும் இந்த நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது தொடர்பான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

16 Apr 2025 16:39 PM

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் கண்களின் உதவியுடன் தான் நகர்கிறது. பார்வை இல்லாமல் வாழ்வது கடினம். மனிதர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை பெருவதற்கு கண்களே பெரிதும் உதவுகின்றன. அதனை முறையாக பராமரிப்பது அவசியம். கண்களில் ஏற்படும் பிரச்னைகளை நாம் ஆரம்பத்தில் அலட்சியமாக கருதுவதுண்டு. அவை சில நேரங்களில் பார்வை பறிபோகும் அளவுக்கு பெரிய பிரச்னையாக மாறும் அபாயம் இருக்கிறது. தூக்கமின்மை, மாசுபட்ட காற்று, அலர்ஜி போன்ற காரணங்களால் கண்கள் சிவந்து போவதும், நீண்ட நேரம் மொபைல் (Mobile Phone) அல்லது கம்ப்யூட்டர் (Computer) பயன்படுத்துவதால் கண்கள் உலர்ந்து சோர்வடைவதும் மிக சாதாரணமாகவே ஏற்படக்கூடியவை. வருடத்திற்கு குறைந்தது ஒருமுறை முழுமையான கண் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக கிளௌகோமா எனப்படும் கண் அழுத்த நோய் (Glaucoma) ஆரம்ப கட்டத்தில் எவ்வித அறிகுறிகளும் தெரியாமல் பார்வையை இழக்கச் செய்யும் என்பதால், முன்கூட்டியே பரிசோதித்து தடுப்பது நல்லது.

கிளௌகோமா என்பது பார்வை நரம்புகளை பாதிக்கும் ஒரு முக்கியமான கண் நோயாகும். இது பெரும்பாலும் கண்களில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. அந்த அழுத்தம் அதிகரித்தால் பார்வைக்கு உதவும் நரம்புகள் மெதுவாக சேதமடைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாமல் இருக்கும். ஆனால் பிற்காலத்தில் பார்வை மெதுவாக குறையத் தொடங்கும்.

கிளௌகோமா அறிகுறிகள்

ஆரம்ப கட்டங்களில், எந்தவித வலியும், அசௌகரியமோ, பார்வை குறைபாடோ இருக்காது. நோயின் தாக்கம் அதிகரித்த பிறகே அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். குறிப்பாக நாம் நேராக பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் வலது அல்லது இடது பக்கங்களில் பார்க்கும்போது தெளிவாக தெரியாமல் போகலாம். இரவு நேரங்களில் பார்வை குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக இரவு நேரங்களில் கார் ஓட்டும் போது, எதிரிலிருந்து வரும் ஒளி மிகவும் சிரமத்தை தரலாம். மிகக் குறைவானோருக்கே கண்கள் சிவப்பாவது, வலி ஏற்படுவது, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

கிளௌகோமா ஏற்படுவதை தடுப்பது எப்படி?

அறிகுறிகள் தெரியாமலேயே பார்வையை பாதிக்கும் இந்த நோயை முன்கூட்டியே தடுப்பது மட்டுமே பாதுகாப்பான வழி. நாம் தினசரி பழக்கவழக்கங்களை மாற்றினாலே, இதைத் தவிர்க்க முடியும். ஆரம்ப கட்டங்களில் அறிகுறி தெரியாத நோயாக இருப்பதால், வருடத்திற்கு ஒரு முறை முழுமையான கண் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது கிளௌகோமா இருந்தால், இது மரபில் வரும் சாத்தியம் அதிகம். அப்படியானவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை அவசியம்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை கிளௌகோமாவிற்கு காரணமாக இருக்கலாம். எனவே இதனை கட்டுப்பாட்டில் வைத்தால், கண்களை பாதுகாக்கலாம். மேலும் தினசரி நடைபயிற்சி, யோகா, சத்தான உணவுகள் ஆகியவை கண் அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். ஆனால் சில யோகாசனங்கள் கண் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். புகைபிடிப்பதும், அதிக மது அருந்தலும், கண்களில் உள்ள நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.

பார்வை மங்கலாக தெரிவது, பக்க பார்வையில் மாற்றம், இரவில் பார்வை பிரச்சனை போன்றவை இருந்தால், ‘இது சாதாரணம்தான்’ என்று நினைக்காமல், உடனடியாக கண் மருத்துவரை அணுகினால் பார்வையிழப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)