பாரம்பரிய அரிசியா? சாதாரண அரிசியா? நீரிழிவு நோய்க்கு எது சிறந்தது?
Diabetic health advice: நீரிழிவு நோய் குறித்த தவறான புரிதல் மக்களிடையே நிலவி வருகின்றன. அந்த வகையில் நீரிழிவு நோய்க்கு பாரம்பரிய அரிசி நல்லதா? அல்லது சாதாரண அரிசி நல்லதா? என்ற மக்களின் குழப்பத்தை மருத்துவர் அருண் குமார் தனது வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் (Diabetes ) வெகு இயல்பாக சமூகத்தில் காணப்படுகிறது. உலகளவில் அதிக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா (India) இருக்கிறது. நம் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தவறான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை இந்த நோய்க்கு காரணமாக கூறப்படுகிறது. அதற்கு கவனம் செலுத்தாமல் விட்டால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக சிறுநீரக கோளாறுகள், கண் பார்வை பாதிப்பு, நரம்புகளில் பாதிப்பு போன்ற பெரும் உடல் நல பிரச்னைகள் உருவாகக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம்
தவறான உணவு பழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக சத்துக்கள் நீக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, மாவுப் பொருட்கள், ஜங்க் ஃபுட், கார்ப்பனேட்டட் டிரிங்க்ஸ், எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும் போது நமக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. மேலும் உடற்பயிற்சி இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது. போதிய தூக்கம் இல்லாமை போன்றவையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
குடும்பத்தில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்றவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். பணி அழுத்தம், குடும்ப பிரச்னைகள் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது உடலின் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கும்.
தவிர்ப்பது எப்படி?
தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சி அவசியம். முடிந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. தியானம், யோகா போன்றவை நம் மன அழுத்தத்தை குறைக்கும். அடிக்கடி ரத்த சர்க்கரை அளவை அறிந்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வது பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும்.
பாரம்பரிய அரிசி நல்லதா? சாதாரண அரிசி நல்லதா?
View this post on Instagram
இந்த நிலையில் பிரபல மருத்துவர் அருண் குமார், பாரம்பரிய அரிசிகளை எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், அரிசியில் உமி எல்லாவற்றையும் நீக்கி பிறகு தவிடு என்ற ஒரு அமைப்பு இருக்கும். அதற்குள் இருக்கும் வெள்ளைப்பகுதி தான் நாம் சாப்பிடக் கூடிய அரிசி. தவிடு என்று சொல்லக் கூடிய பிரான் என்ற லேயரில் (Bran Layers) நிறைய சத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக நார் சத்துகள் நிறைய இருக்கிறது. இதில் புரௌன் ரைஸ்னு சொல்லப்படுவது அப்படியே அந்த தவிடோடு சாப்பிடுவது தான்.
பொன்னி அரிசியில் தவிடை நீக்கவில்லை என்றால் அது புரௌன் ரைஸ். பாரம்பரிய அரசிகளான கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி ஆகியவை எல்லாம் நாம் தவிடை நீக்காமல் முழு தானியமாக சாப்பிடுகிறோம். தவிடு லேயர் இருப்பதனால் வைபர் எனப்படும் நார் சத்து அதிகமாக இருக்கும். ஆனால் சுவை சுமாராகத் தான் இருக்கும். நார் சத்து இருப்பது ஒரு பலன் என்றாலும் அதன் சுவை நன்றாக இருக்காது என்பதால் குறைவான உணவை எடுத்துக்கொள்வோம். ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியைக் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அரிசி எவ்வளவு சாப்பிடுகிறோமோ அதற்கு இரண்டு மடங்கு காய்கறியையும் சாப்பிட வேண்டும். விலையுயர்ந்த பாரம்பரிய அரிசிகளை எடுத்துக்கொள்வதை விட சாதாரண அரிசியை இரண்டு மடங்கு காய்கறிகளுடன் எடுத்துக்கொண்டால் அதனை விட சிறந்த பலன் கிடைக்கும் என்றார். நாம் நார் சத்துக்களை அதிகம் எடுத்துக்கொண்டாலே நல்லது.என்றார்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)