‘Weight Loss’ மருந்துகளால் பிரபலங்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் – அதிர்ச்சி தகவல்

Ozempic Side Effects : மாறி வரும் பணி சூழல் காரணமாக தற்போது உடல் எடை அதிகரிப்பு பிரச்னையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் உலக அளவில் பிரபலங்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Weight Loss மருந்துகளால் பிரபலங்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் - அதிர்ச்சி தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

20 Apr 2025 16:14 PM

இப்போது நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டெஸ்க் ஜாப் காரணமாக பலருக்கு உடல் எடை அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. சமீப காலமாக இளைஞர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மாரடைப்புக்கு (Heart Attack) இதுபோன்ற உடல் எடை அதிகரிப்பே காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடை எடையக் குறைக்க (Weight Loss) வேண்டிய கட்டாயத்தில் பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. இயற்கையாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் 100க்கு 90 சதவிகிதம் பேர் தோல்வியைத் தான் சந்திக்கின்றனர். மேலும் மிகவும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற மோகமும் அதிகரித்திருக்கிறது. கேரளாவில் ஒரு பெண் தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என யூடியூப் வீடியோவை பார்த்து வாட்டர் டயட் என்ற பெயரில் நீரை மட்டும் அருந்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் உடனடியாக எடை குறைக்கிறேன் என சில மருந்துகளை எடுத்துக்கொள்ள அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஒசெம்பிக்(Ozempic) போன்ற மருந்துகளை உடல் எடை குறைப்பிற்காக பலரும் எடுத்துக்கொள்கின்றனர். இது உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது பலருக்கும் பெரிதளவில் பயனளித்துள்ளது. எலான் மஸ்க் போன்ற பல பிரபலங்கள் இந்த மருந்தை உடல் எடை குறைப்பிற்காக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மருந்தை எடுத்துக்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கரண் ஜோகருக்கு ஏற்பட்ட பாதிப்பு

சமீபத்தில் பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் திடீர் உடல் எடை இழப்புக்குப் பிறகு, ஒசெம்பிக் என்ற மருந்தின் பெயர் அதிகம் பேசப்பட்டது. கரண் ஜோஹர் தான் அவற்றை பயன்படுத்தவில்லை என்று தெளிவாக சொன்னாலும் அவருக்கு தோல்களில் சுருக்கம் காணப்படுவதாகவும் அது அந்த பருந்தின் பக்க விளைவுகள் தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்கள் இந்த மருந்துகளை பயன்படுத்தி எடையை குறைத்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியுள்ளது.

உடல் எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், பாரி வெயின்ட்ராப் இதுகுறித்து தெரிவித்ததாவது, ”ஒசெம்பிக் மற்றும் மௌன்ஜரோ(Mounjaro) போன்ற எடை குறைக்கும் மருந்துகள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நேர் சேர்மத்தை வெகுவாக குறைத்துவிடுகின்றன. இதனால் காலின் மேற்பகுதியில் உள்ள மென்மையான கொழுப்பு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த பகுதி சுருங்கிப் போய் காட்சியளிக்கின்றன. இது தற்காலிகமாக ஒசெம்பிக் கால்கள்” என அழைக்கப்படுகிறது.

ஷாரன் ஆஸ்போர்ன் என்பவர் ஒசெம்பிக் மருந்தை பயன்படுத்தி 42 பவுண்ட் அளவுக்கு எடையைக் குறைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் பலரும் அவரது கால் பகுதி சுருக்கங்கள் அதிகரித்து மடங்கி போய் காட்சியளிப்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதால் பலரும் தோல்கள் சுருங்கி வயதான தோற்றத்துடன் காட்சியளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் பக்க விளைவுகள் தெரியாமல் இந்த மருந்தை உலக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக நடிகர்கள் ஒரு படத்தில் இருந்து மற்றொரு படத்தில் தங்களை வித்தியாசப்படுத்தி காட்ட இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவர். குறைவான காலகட்டத்தில் அவர்கள் உடல் அமைப்பை மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைப்பதே சிறந்தது என இதுபோன்ற செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.