Vitamin B12 Deficiency: சோர்வு, தலைசுற்றலா..? வைட்டமின் பி12 குறைப்பாடாக இருக்கலாம்.. இதுதான் அறிகுறிகள்!
Low Vitamin B12: வைட்டமின் பி12 குறைபாட்டின் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சோர்வு. போதுமான பி12 உடலில் இல்லாமல் இருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய போராடும். ஆக்ஸிஜன் பற்றாக்குறை உங்களை முழு இரவு ஓய்வுக்கு பிறகும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர வைக்கும்.

கோபாலமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் பி12 (Vitamin B12), நீரில் கரையக்கூடிய ஒரு முக்கியமான வைட்டமின் ஆகும். இது இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, நரம்பு செயல்பாடு மற்றும் டிஎன்ஏ தொகுப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியமான வைட்டமின் குறைப்பாட்டை கவனிக்கப்படாவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடல் இயற்கையாகவே இந்த வைட்டமின்களை உற்பத்தி செய்யாது. எனவே, இதை பெற இறைச்சி, பால் பொருட்கள், முட்டை (Egg) மற்றும் தானியங்கள் போன்ற உணவு பொருட்களில் இருந்தே பெற முடியும். இருப்பினும் பலர், குறிப்பாக தாவர அடிப்படையிலான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். ஒரு சில நோய் உள்ளவர்கள் பி12ஐ பெறுவது சவாலாக இருக்கும். இந்தநிலையில், வைட்டமின் பி12 குறைப்பாட்டின் எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம். இது காலப்போக்கில் மிகவும் கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கலாம். அதை கண்டறிவது எப்படி..?
சோர்வு மற்றும் பலவீனம்:
வைட்டமின் பி12 குறைபாட்டின் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சோர்வு. போதுமான பி12 உடலில் இல்லாமல் இருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய போராடும். ஆக்ஸிஜன் பற்றாக்குறை உங்களை முழு இரவு ஓய்வுக்கு பிறகும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர வைக்கும். போதுமான தூக்கத்தை பெற்றாலும், நீங்கள் சோர்வாக உணர்ந்தால், உங்களுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையாக இருக்கலாம். எனவே, உங்கள் வைட்டமின் பி12 அளவை சரிபார்ப்பது நல்லது.
வெளிறிய அல்லது மஞ்சள் நிற தோல்:
வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களில் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இரத்த சோகை உங்கள் தோலை வெளிறியதாக மாற்றலாம். இது தொடர்ந்து, மஞ்சள் காமாலைக்கு வழிவகுக்கும். இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். உங்கள் தோல் அக்கது கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதை கண்டால், மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
சிந்திப்பதில் சிரமம்:
வைட்டமின் பி12 குறைபாட்டின் மிகவும் கடுமையான அறிகுறிகளில் ஒன்று நினைவாற்றல் பிரச்சனை. இது தெளிவாக சிந்திக்க, முடிவுகளை எடுக்க, கவனம் செலுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இது சில நேரங்களில் டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
மனச்சோர்வு:
வைட்டமின் பி12 மனநிலையை ஒழுங்குபடுத்தும். செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மூளை இரசாயனங்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. பி12 குறைபாடு இந்த இரசாயனங்களின் உற்பத்தியை சீர்குலைத்து, மனச்சோர்வு, எரிச்சல் மற்றும் பதட்டத்தை உண்டாக்கும்.
தலைச்சுற்றல்:
வைட்டமின் பி12 இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் ஆக்ஸிஜன் போக்குவரத்தில் பங்கு வகிப்பதால், இது இல்லாதபோது மூச்சு திணறல் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் உழைப்பின்போது இரத்த சிவப்பணுக்கள் இல்லாததால் உடலுக்கு ஆக்ஸிஜன் சேராமல் சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்.
வைட்டமின் பி12 குறைப்பாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்வது..?
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் ஒன்றை நீங்களும் சந்தித்தால், உங்கள் வைட்டமின் பி12 அளவை சரிபார்க்க இரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது நல்லது. மேலும் இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற பி12 நிறைந்த உணவுகளை உங்கள் உணவுகளில் சேர்த்து கொள்வது வைட்டமின் பி12 அளவை நிரப்ப உதவி செய்யும்.