விராட் கோலியின் ‘சைவ’ ரகசியம் – மிகப்பெரிய உருட்டா? – பிரபல மருத்துவர் விளக்கம்

Truth behind Virat Kohli's diet: பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் சைவமாக மாறியதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது பிரபல மருத்துவர் அருண் குமார் விளக்கமளித்துள்ளார்.

விராட் கோலியின் சைவ ரகசியம்  - மிகப்பெரிய உருட்டா? - பிரபல மருத்துவர் விளக்கம்

விராட் கோலி

Updated On: 

15 Apr 2025 21:51 PM

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (Virat Kohli) ரசிகர்களால் கிங் கோலி என அழைக்கப்படுகிறார். உலக அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவராக எதிரணியினருக்கு சிம்ம சொப்ப சொப்பனமாக விளங்குகிறார். இந்திய அணியின் கேப்டனாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக அவர் ஆக்ரோஷமாக விளையாடும் முறை ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அப்போது முதல் அந்த அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஆடி வருகிறார். மேலும் கேப்டனாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியை ஐபிஎல் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். அதே 2016 ஆம் ஆண்டு 973 ரன்களை எடுத்து ஐபிஎல் ஒரே சீசனில் அதிக ரன்களை பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர். தற்போது அவர் தொடர்ந்தும் ஆர்சிபிக்கான முக்கிய வீரராக விளையாடி வருகிறார்.

விராட் கோலியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் வாமிகா என்ற பெண் குழந்தையும் அகாய் (Akaay) ஆண் குழந்தையும் உள்ளனர். விராட் கோலி ஃபிட்னெஸிற்கு பெயர் பெற்றவர். கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பம் முதல் தற்போது வரை உடல் வடிவமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அது அவர் களத்தில் ஆக்டிவாக இருப்பதற்கு பெரிதும் கைகொடுக்கிறது.

விராட் கோலி சைவமாக மாறியதற்கான காரணம்

இந்த நிலையில் விராட் கோலி தனது உணவு பழக்கம் குறித்து ஒரு வீடியோவில் தெரிவித்திருக்கிறார். அவரது பேட்டியில், என் உடலின் ஆரோக்கிய குறைபாடு காரணமாக நான் சைவமாக மாறினேன். என் வயிறு அமிலத்தன்மை (Acidic) கொண்டதாக மாறியது. அது என் எலும்பில் உள்ள கால்சியத்தை எடுத்துக்கொண்டது. பின்னர் அது என் உடல் நலத்தை பாதித்தது. அதனால் அமிலத்தை குறைத்து அல்கலைனாக மாற்ற அசைவ உணவுகளை விட்டுவிட்டேன் என்றார்.

விராட் கோலி சொல்வது உருட்டா?

 

இநத வீடியோ வைரலான நிலையில் இதற்கு மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், விராட் கோலி சொல்வது பொய் போல தெரிகிறது. உடலில் அமிலத்தன்மை அதிகம் இருப்பது வயிறு தான். அதுதான் இயற்கை. பிஎச் அளவு 7 ஐ விட குறைவாக இருந்தால் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது என்போம். நம் உடலில் உணவை செரிமானம் செய்வதற்காக சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டின் பிஎச் மதிப்பு 1. அந்த அளவுக்கு அமிலத்தன்மை இருக்கும். உடம்பில் அமிலத்தன்மை இருந்தால் தான் நாம் சாப்பிடும் புரோட்டீன் செரிமானமாகும். மிகப்பெரிய தவறான புரிதலை விராட் கோலி வைத்திருக்கிறார். சைவம் பிடிக்கும்னா சைவம் சாப்பிடுங்கள். ஆனால் அதற்கு அமிலத்தன்மை என்பதை காரணமாக சொல்லாதீர்கள். விராட் கோலி சொல்வது உருட்டாக இருக்கிறது. அவரை யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள் என்றார்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)