கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு – மலேரியா ! குழப்பத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் – தெரிந்துகொள்வது எப்படி?
Typhoid and Malaria Symptoms : கோடையில் டைபாய்டு மற்றும் மலேரியா இரண்டும் கடுமையான நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் நீண்ட நேரம் நீடித்தாலோ அல்லது நடுக்கத்துடன் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகவும். இரண்டு நோய்களுக்கான அறிகுறிகள் என்ன? எப்படி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

கோடை காலம் (Summer) வந்தவுடன், பல வகையான நோய்கள் வேகமாகப் பரவத் தொடங்குகின்றன. குறிப்பாக டைபாய்டு (Typhoid) மற்றும் மலேரியா (Malaria) போன்ற காய்ச்சல்கள் இந்த நேரத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. இரண்டு நோய்களுக்குமான அறிகுறிகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் அறிவுறையின் படி இரண்டு நோய்களின் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். கோடையில் டைபாய்டு மற்றும் மலேரியா இரண்டும் நோய்களும் கடுமையாக பாதித்து வருகின்றன. காய்ச்சல் நீண்ட நேரம் நீடித்தாலோ அல்லது உடல் நடுக்கம் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். யூகத்தின் அடிப்படையில் நாமாக மருந்து எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, சரியான பரிசோதனைகளைச் செய்த பிறகு சிகிச்சை பெறுவதே பாதுகாப்பான வழியாக பார்க்கப்படுகிறது.
இரண்டு நோய்களின் அறிகுறிகளும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு மலேரியா இருக்கிறதா அல்லது டைபாய்டு இருக்கிறதா என்று குழப்பமடைகிறார்கள். சரியான சிகிச்சைக்கு, சரியான நோயைக் கண்டறிவது முக்கியம். இந்த இரண்டு காய்ச்சல்களின் அறிகுறிகளில் உள்ள வேறுபாடு என்ன, அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை மருத்துவர்கள் அளித்த தகவலின் படி தெரிந்து கொள்ளலாம்.
டைபாய்டு அறிகுறிகள்?
டைபாய்டு என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று ஆகும், இது சால்மோனெல்லா டைஃபி எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது பொதுவாக அழுக்கு நீரைக் குடிப்பதாலோ அல்லது அசுத்தமான உணவைச் சாப்பிடுவதாலோ நிகழ்கிறது. தொடர்ந்து அதிக காய்ச்சல் (103°F வரை), தலைவலி மற்றும் பலவீனம், பசியின்மை, வயிற்று வலி அல்லது மலச்சிக்கல், உடல் வலி, தலைச்சுற்றல், போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். உங்களுக்கும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
மலேரியாவின் அறிகுறிகள்?
மலேரியா என்பது பிளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒட்டுண்ணிகளால் பரவும் நோயாகும். இந்த ஒட்டுண்ணி பெண் அனோபிலிஸ் கொசுவின் கடியால் பரவுகிறது. காய்ச்சலுடன் குளிர், வியர்வை, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
எப்படிக் கண்டறிவது?
மருத்துவர்களின் கூற்றுப்படி, டைபாய்டு மற்றும் மலேரியாவில் காய்ச்சலின் தன்மை வேறுபட்டது. டைபாய்டில், காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து தொடர்ந்து நீடிக்கும். மலேரியாவில், காய்ச்சல் திடீரென வந்து, கடுமையான நடுக்கத்துடன், பின்னர் வியர்வையுடன் குறையும். இது தவிர, டைபாய்டில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன, அதே நேரத்தில் மலேரியாவில் குளிர் மற்றும் மூட்டு வலி அதிகமாகக் காணப்படுகின்றன.
சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
நோயாளியின் நிலையைப் பரிசோதித்த பிறகு மருத்துவர் இரத்தப் பரிசோதனை செய்வார். டைபாய்டுக்கு விடல் டெஸ்ட் மற்றும் டைஃபை-டாட் டெஸ்ட் செய்யப்படுகின்றன, அதே நேரத்தில் மலேரியாவுக்கு விரைவான மலேரியா டெஸ்ட் மற்றும் புற இரத்த ஸ்மியர் ஆகியவை செய்யப்படுகின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது முக்கியம். டைபாய்டு காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளும், மலேரியாவுக்கு ஆன்டிமலேரியல் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.