டூத் பேஸ்ட்டில் இருக்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – இந்த பிராண்டுகளில் பிரச்னையா?

Toxic Toothpaste Alert: பல் துலக்குவது நாம் அன்றாடம் மேற்கொள்ளும் முக்கியமான செயல்களில் ஒன்று. இந்த நிலையில் சில பிரபல டூத் பேஸ்ட் பிராண்டுகளில் ஆபத்தான கனிமங்கள் இடம் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை இந்த பிராண்டுகள் ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டிருக்கிறது.

டூத் பேஸ்ட்டில் இருக்கும் ஆபத்து - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - இந்த பிராண்டுகளில் பிரச்னையா?

மாதிரி புகைப்படம்

Published: 

23 Apr 2025 17:17 PM

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பிரபல டூத் பேஸ்ட் (Tooth Paste) பிராண்டுகள் மற்றும் டூத் பவுடர் வகைகள் அதிக நச்சுத் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் லீட் சேஃப் மாமா ( Lead Safe Mama ) என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் 51 பிராண்டுகள் மீது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில், 90% டூத் பேஸ்ட் பிராண்டுகளில் லீட் (Lead) எனும் அபாயகரமான வேதிப் பொருளைக் கொண்டிருந்ததாகவும் மேலும், 65% டூத் பேஸ்ட் பிராண்ட்களில் அர்சினிக் (arsenic) எனும் தீவிர நச்சுப் பொருள் இருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. டூத் பேஸ்ட் மற்றும் டூத் பவுடர் பிரண்ட்களில் 47 சதவிகித வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரி (Mercury) என்ற வேதிப் பொருள் இருந்திருக்கிறது. அதேபோல, 35 சதவிகித டூத் பேஸ்ட் பிராண்ட்களில் கட்மியம் (Cadmium) எனும் ஆபத்தான கனிமத்தையும் கொண்டிருந்தன.

லீட் சேஃப் மாமா நிறுவனத்தின் தலைவர்  தமாரா ரூபின் இதுகுறித்து தெரிவித்ததாவது, “2025 ஆம் ஆண்டில் கூட இத்தகைய உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் டூத் பேஸ்ட்களில் இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.  பெரும்பாலான மக்கள் இதனை கவனிப்பதில்லை என்பது மிகப் பெரிய சோகமாய் இருக்கிறது,” என்றார்.

குழந்தைகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

மேலும் குழந்தைகளுக்கு இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாயோ கிளினிக் என்ற மருத்துவ அமைப்பு, 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு லீட் என்ற நச்சுப் பொருளை அளிப்பதால் உடல் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மிக அதிக அளவில் லீட் எடுத்துக்கொண்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்ட பிராண்டுகள்

கிரெஸ்ட், சென்சோடைன், டாம்ஸ் மெய்ன, டாக்டர் புரோன்னர்ஸ், டேவிட்ஸ், டாக்டர் ஜென், கோல்கேட், டாக்டர் பிரைட் ஆகிய டூத் பேஸ்ட் பிராண்டுகளில் இந்த ஆபத்தான கனிமங்கள் இடம் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவல் அந்த டூத் பேஸ்ட் பிராண்டுகளை பயன்படுத்தும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டூத் பேஸ்ட் மட்டுமில்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை, எந்த கேள்வியும் கேட்காம்ல  நாம்  நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவை நம் ஆரோக்கியத்துக்கு உகந்ததா என்ற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. மார்கெட்டுகளில் கிடைக்கும் பொருட்கள்  தீங்கு விளைவிக்காது என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம். இனி மக்கள் இதனைப்பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மார்கெட்டில் ஏகப்பட்ட டூத் பேஸ்ட் பிராண்ட்கள் விற்கப்படுகின்றன. பல் மருத்துவர்களிடம் ஒரு முறை கலந்தாலோசித்து விட்டு டூத் பேஸ்ட் பிராண்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.