கோடையில் வாக்கிங் சிறந்ததா? எப்போது, எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Summer Walking Tips: கோடைகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி மிக முக்கியம். ஆனால் எப்போது நடக்கலாம்? எவ்வளவு நேரம் நடந்தால் நல்லது? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் உடல்நிலை பாதிப்பு போன்ற மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். கோடைகாலத்தில் நடைபயிற்சி செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கோடைகாலத்தில் (Summer) உடற்பயிற்சி செய்வது ஒரு சவாலானதாக இருந்து வருகிறது. அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக, உடலைச் சோர்வடையச் செய்வதோடு, நீர் இழப்பும் ஏற்படுகிறது. இதனால், சரியான முன்னெச்சரிக்கை இல்லாமல் உடற்பயிற்சி(Exercise) செய்தால் தலைசுற்றல், சோர்வு, மோசமான உடல்நல பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம். குறிப்பாக உடலில் உள்ள நீர் சீக்கிரம் வியர்வையாக வெளியேறும். இது உடல் சோர்வுக்கு காரணமாகிறது. வெப்பம் காரணமாக உடலில் சக்தி விரைவாக குறைகிறது. மேலும் வெப்பத்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். ஓய்வு இல்லாமல் பயிற்சி செய்தால் மயக்கம் ஏற்படலாம். சிலருக்கு உடனடி மன அழுத்தம் கூட ஏற்படலாம். அதிக வெப்ப நேரத்தில் உடற்பயிற்சி செய்யாமல் காலை 6-9 அல்லது மாலை 5க்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கவிடுக்கின்றனர்.
மேலும் கோடைகாலங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக அளவு நீர் குடிப்பது, எலக்ட்ரோலைட் சேர்க்கப்பட்ட தண்ணீரை அருந்துவது அவர்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். உடலை சோர்வடைய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது வேலைகளுக்கு ஏற்ப உடற்பயிற்சி நேரத்தை நிர்ணயிப்பது நல்லது. குறிப்பாக அதிக நேரம் பணி செய்பவர்கள் தங்கள் உடற்பியிற்சி நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உணவிலும் கவனம் செலுத்துவது அவசியம். கோடைகாலங்களில் பழங்கள், உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் இளநீர் போன்ற இயற்கை பானங்கள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. சரியான திட்டமிடல் மற்றும் எச்சரிக்கையுடன், கோடைகாலத்திலும் ஆரோக்கியமான உடற்பயிற்சியைத் தொடரலாம். கோடையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடைக் குறைப்பதற்கும் நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழி. ஆனால் அதிக வெப்பம் காரணமாக, எப்போது, எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம்.
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
இதுதொடர்பாக இந்தியா டுடேயின் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல, தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் நடப்பது போதுமானது. இது வாரத்திற்கு 180 நிமிடங்கள் என்று கணக்கிடலாம். அதாவது நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் என வாரம் 6 நாட்கள் என நடைபயிற்சி செய்வது நல்லது. வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் காலை 6 முதல் 8 மணி அல்லது மாலை 6க்கு பிறகு நடக்கலாம். நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வது நல்லது. இது நமது உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும்.
கோடைக்கால நடைப்பயிற்சிக்கு தேவையான முக்கிய குறிப்புகள்
அதே போல சரியான வாக்கிங் ஷூ தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். குறிப்பாக காற்றோட்டம் உள்ளதாக தேர்ந்தெடுப்பது நல்லது. மிகவும் சோர்வாக உணர்ந்தால் உடனே ஓய்வெடுக்க வேண்டும். உடல் வியர்வை அதிகம் வெளியேறுதல் மற்றும் அதிக மூச்சு வாங்கினால் ஹீட் ஸ்டிரோக் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கோடையில் நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் மேலே குறிப்பிட்ட படி அதற்கு தகுந்த நேரத்தில் குறைவான கால அளவில் மேற்கொள்வது நல்லது.