Summer Health Tips: இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் கோடை.. கட்டுப்படுத்த எளிய குறிப்புகள் இதோ..!
High Blood Pressure Summer: கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது. தண்ணீர் அதிகம் குடிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, உப்புச்சத்து குறைவான உணவு உட்கொள்வது மற்றும் மிதமான உடற்பயிற்சி ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். வெயிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்த்து, குளிர்ச்சியான சூழலில் இருப்பது அவசியம். இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் கோடை காலத்திலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கோடை காலம் (Summer) ஒரு கொடூர காலம் என்று சொல்லும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் பலவிதமான டிரிக்களை கையாண்டு வருகின்றனர். அது பெரும்பாலும் உடலில் வெளிப்புறத்தை பற்றியதாக இருந்தாலும், உடலின் உட்புறத்தை பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பிரச்சனையை உண்டாக்கும். இன்றைய காலத்தில் இரத்தம் அழுத்தம் (Blood Pressure) மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதன்படி, இதை கட்டுக்குள் வைப்பது மிக மிக முக்கியம். கோடைக்காலத்தில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது நமது இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது உயர் இரத்த அழுத்தத்தையும் தூண்டும்.
எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் கோடையில் தங்கள் உடலை நிதானத்துடனும், குளிர்ச்சியாகவும் வைப்பது நல்லது. அந்தவகையில், கோடை காலத்தில் சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் குடித்தல்:
கோடை காலத்தில் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான். கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து இல்லாததால், உடல் வெப்பநிலை அதிகரிக்கும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, இரத்தம் கெட்டியாகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதன்படி, அடிக்கடி தண்ணீர் எடுத்துகொள்வது நல்லது. அதேபோல், உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யும்போது கூட உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படலாம். அந்தநேரத்தில், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, நீரேற்றமாக இருப்பது மிக முக்கியம். அதன்படி, அடிக்கடி தண்ணீர் எடுத்துகொள்வது நல்லது.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்:
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எப்போது மனதை அமைதியுடன் வைப்பது மிக முக்கியம். இது இரத்த அழுத்ததை அதிகரிக்கலாம். அதன்படி, கோடை காலத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க முயற்சி செய்வது நல்லது. மேலும், கோடை காலத்தில் காலை அல்லது மாலை நேரத்தில் தியானம், யோகா உள்ளிட்டவற்றை மேற்கொண்டு மனதை அமைதி ஆக்கலாம். இது, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் இருக்க உதவி செய்யும்.
குறைவான உப்பு:
கோடை காலம் மட்டுமின்றி, எல்லா காலத்திலும் உணவில் உப்பை குறைவாக எடுத்து கொள்வது நல்லது. அதேபோல், கோடை காலத்தில் அதிக அளவு உப்பு உள்ள உணவுகளான வெளிப்புற உணவு, துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி:
கோடை காலத்தில் மிக அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். குறைந்த அளவில் உடற்பயிற்சி செய்வதுடன் நிறைய தண்ணீர் எடுத்து கொள்வதும் நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)