Summer Health Tips: கோடையில் ஐஸ் வாட்டர் இவ்வளவு ஆபத்தானதா..? எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்..!
Health Risks of Ice Water: ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, அலோபதி அல்லது ஹோமியோபதியிலும் கூட குளிர்ந்த நீர் குடிப்பது உடலுக்கு சிறந்தவை அல்ல என்று குறிப்பிடப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து
கடந்த சில வருடங்களாக வெப்பநிலை எந்த அளவுக்கு உயர்ந்து வருகிறது என்பதை நம் ஆண்டுதோறும் பார்த்து வருகிறோம். பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை கண்டறிய முயற்சிக்கிறார்கள். கோடை காலத்தில் (Summer) பெரும்பாலான மக்கள் வெயிலில் தாகத்தைத் தணிக்க பிரிட்ஜில் குளிர்ந்த நீரை நேரடியாக குடிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த குளிர்ந்த நீர் (Ice Water) உடலுக்கு எவ்வளவு மோசமானது என்பது பலருக்குத் தெரியாது. இந்த சூழலில், ஆயுர்வேத நடைமுறையில் குளிர்ந்த நீர் உடலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்…
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, ஐஸ் குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலில் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இதன்காரணமாகதான் உடலில் செரிமானப் பிரச்சினைகள் உருவாக தொடங்குகின்றன. செரிமான பிரச்சனைகள் காரணமாக, உணவில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் செல்களுக்குள் உறிஞ்சப்படுவதில்லை. இந்த வகையான ஊட்டச்சத்து குறைபாடு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், ஆயுர்வேதத்தின்படி, மலச்சிக்கல் என்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாகும். அதிகப்படியான குளிர்ந்த நீரைக் குடிப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாகிறது. அதாவது, குளிர்ந்த நீர் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. அதே நேரத்தில், இது உடலின் வலிமையையும் குறைக்கிறது. அதன்படி, ஆயுர்வேதம் குளிர்ந்த நீரை தவிர்க்கமாறும், வெதுவெதுப்பான நீரை குடிப்பதையும் வலியுறுத்துகிறது.
ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, அலோபதி அல்லது ஹோமியோபதியிலும் கூட குளிர்ந்த நீர் குடிப்பது உடலுக்கு சிறந்தவை அல்ல என்று குறிப்பிடப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கோடை காலத்தில், நமது உடல் வெப்பநிலை பொதுவாக 37 டிகிரி செல்சியஸைச் சுற்றி இருக்கும். இருப்பினும், இது வளிமண்டல வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும். அதிகபடியான வெப்பத்திலிருந்து ஒருவர் ஒரு அறைக்குள் நுழைந்து உடனடியாக குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, உங்கள் உடலின் அனைத்து அமைப்புகளும் உடல் வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்திற்கு எதிர்வினையாற்றத் தொடங்குகின்றன. இது சில நேரங்களில் செரிமானத்திற்குத் தேவையான நொதிகளின் உற்பத்தியையும், நரம்புகள், இரத்த நாளங்கள் அல்லது தமனிகள் மற்றும் தொடர்புடைய உறுப்புகளின் செயல்பாட்டையும், குறிப்பாக இதயத்தையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மக்கள் தொண்டை புண் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
குளிர்ந்த நீரைக் குடித்தால் என்ன நடக்கும்..?
- அதிகமாக குளிர்ந்த நீரைக் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. இது நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வேகஸ் நரம்பையும் தூண்டுகிறது. மேலும், தன்னிச்சையான செயல்களையும் உடல் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகிறது. நீரின் குறைந்த வெப்பநிலையால் வேகஸ் நரம்பு நேரடியாகப் பாதிக்கப்படுவதால், உடலின் பல பாகங்கள் தண்ணீரால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இதயத்தைப் பொறுத்தவரை இது மிகவும் தீவிரமானதாக மாறக்கூடும். இது இதயத் துடிப்பு குறைவதற்கும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
- குளிர்ந்த நீர் மார்பில் சளி சேர வழிவகுக்கும். இது உடலை பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாக்கும். அதிக குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் நீர் குடிப்பது சில நேரங்களில் மூளை உறைபனியின் அறிகுறிகளை ஏற்படுத்தும். ஏனென்றால் குளிர்ந்த நீர் முதுகுத்தண்டில் உள்ள பல உணர்திறன் நரம்புகளைப் பாதிக்கிறது. மூளையின் நரம்புகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அதனால், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது சைனசிடிஸ் உள்ளவர்களுக்கு அதிக பிரச்சனைகளையும் உருவாக்கலாம்.