என்னது! அஜினோமோட்டோ நல்லதா? மருத்துவர் சொல்வது என்ன?
Truth Behind Ajinomoto: உணவு பொருட்கள் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படி அஜினோமோட்டோ உடலுக்கு ஆபத்தானது என ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் அஜினோமோட்டோ குறித்து பிரபல மருத்துவர் சொல்லும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

மாதிரி புகைப்படம்
ஆரோக்கியத்துக்காக சாப்பிடுவதை விட்டு எப்பொழுது சுவைக்காக சாப்பிட ஆரம்பித்தோமோ அப்போதே பிரச்னை ஆரம்பமானது. நாம் ஆரோக்கியமாக சாப்பிட நினைத்தாலும் சமூக வலைதளங்களில் (Social Media) ஃபுட் ரிவியூவர்கள் (Food Review) இந்த உணவை சாப்பிட்டிருக்கிறீர்களா? என நம் விரதத்தை கலைத்துவிடுகின்றனர். சமீப காலமாக ஆரோக்கியத்தை பற்றி துளியும் கவலைப்படாமல் சுவைக்காக தேடித்தேடி சாப்பிட ஆரம்பித்த நாட்களில் இருந்து நோய்களும் நம்மை தேடி வர ஆரம்பித்துவிட்டன. சமீப காலமாக இளைஞர்களிடையே ஏற்பட்டு வரும் மாரடைப்புக்கு ஜங்க் புட் ஒரு மிகப்பெரும் காரணமாக கூறப்படுகிறது. அப்படி நாம் தேடித்தேடி சாப்பிடும் உணவுகளில் சுவைக்காக பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த ரசாயனங்கள் ஏற்றவை அல்ல என மருத்துவர்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால் மக்கள் கேட்பதாக இல்லை.
குறிப்பாக இப்பொழுது எங்கு பார்த்தாலும் உணவுடன் மயோனைஸ் வழங்கப்படுகிறது. சான்ட்விச் முதல் ஃபிரைடு சிக்கன்கள் வரை பல உணவுகளுக்கு இந்த மயோனைஸ் சைட் டிஷ்ஷாக வழங்கப்படுகிறது. இது அதிக கொலஸ்ட்ரால் கொண்டது எனவும் அதனை சாப்பிட்டால் இதய பிரச்னைகள் வரும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அஜினோமோட்டோ குறித்து மக்களின் நம்பிக்கை
அதே போலத்தான் உணவுகளுக்கு சுவையூட்டியாக அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. ஃபிரைட் ரைஸ்கள் முதல் பல ஃபாஸ்ட்புட்களில் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. சமீப காலமாக இந்த அஜினோமோட்டோவை மக்கள் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக ஃபாஸ்ட்புட் கடைகளில், ‘அண்ணே, அஜினோமோட்டோ இல்லாமல் ஒரு ஃபிரைட் ரைஸ்’ என கேட்பதை பார்க்க முடியும். இந்த அஜினோமோட்டோ உண்மையில் அவ்வளவு மோசமானது என மக்களிடம் எண்ணம் ஏற்பட்டிருப்பதே அதற்கு காரணம்.
என்னது! அஜினோமோட்டோ நல்லதா?
இந்த நிலையில் பிரபல மருத்துவர் அருண் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜினோமோட்டோ ஆரோக்கியமானது என ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், ”அஜினோமோட்டோ என்பது நிறுவனத்தின் பெயர். அந்த உப்பின் பெயர் மோனோசோடியம் குளூடமேட் என்பதுதான். ஜப்பான் போன்ற நாடுகளில் 100 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் நம் ஊரில் அஜினோமோட்டோ ஆபத்தானது என்ற எண்ணம் இருக்கிறது. இது மூளையை பாதிக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.
அஜினோமோட்டோவில் இருக்கும் மோனோசோடியம் குளூடாமேட் நம் வயிற்றுக்குள் சென்றதும் சோடியம் – குளூடோமேட் என இரண்டாக பிரிந்துவிடும். சோடியம் வழக்கமான சோடியம் மாதிரி அது பிரிந்து சென்றுவிடும். இதில் குளூடாமேட் என்பது மூளையில் பயன்படும் நியூரோடிரான்ஸ்மிட்டர். தக்காளி, காளான் போன்ற பொருட்களிலும் குளூட்டாமேட் கலந்திருக்கும். பிளட் பிளைண்ட் பேரியர் என்ற அமைப்பில் இருக்கும். இது மூளையை பாதிக்கும் என நம்பினால் அது தவறானது. இது பாதுகாப்பானது என FFsai, FDA, யூரோப்பியன் புட் சேஃப்டி அத்தாரிட்டி அனைத்தும் நிரூபித்திருக்கின்றனர். அடுத்த முறை உணவில் அஜினோமோட்டோ இருக்கிறதா என பார்ப்பதை விட உணவில் மாவு சத்து எவ்வளவு இருக்கிறது. சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என பார்ப்பது நல்லது” என்றார்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)