இந்த உணவுகளை காலையில் சாப்பிடாதீங்க! காத்திருக்கும் ஆபத்து – பிரபல மருத்துவர் எச்சரிக்கை
Breakfast Foods to Avoid: மாறி வரும் உணவு பழக்கத்தினால் மனிதர்கள் இளம் வயதிலேயே மாரடைப்பு போன்ற பல அபாயகரமான நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் பிரபல இதய நோய் நிபுணர் ஒருவர் காலையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகளை பட்டியலிட்டிருக்கிறார்.

மாதிரி புகைப்படம்
காலை உணவு (Breakfast) மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ஒருநாள் முழுவதும் மனிதர்கள் செயல்படத் தேவையான ஆற்றலை பெரும்பாலும் காலை உணவிலேயே பெருகிறார்கள். அதனால் அதனை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் இரவு முழுவதும் சாப்பிடாமல் ஃபாஸ்டிங் (Fasting) இருந்துவிட்டு காலையில் முதலில் எடுத்துக்கொள்ளும் உணவுக்கு ஆங்கிலத்தில் பிரேக்ஃபாஸ்ட் என்று பெயர். எனவே காலை உணவில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒரு நல்ல காலை உணவு, மனதைத் தெளிவாக வைத்துக் கொண்டு, உடலை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. சரியான காலை உணவு எடுத்துக்கொண்டால், மதியம் மற்றும் மாலை நேரத்தில் மிக அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறையும். இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். காலை உணவை தவிர்க்கும்போது, சர்க்கரை அளவில் ஏற்ற, இரக்கம் ஏற்பட்டு நீரிழிவு நோய்க்கு (Diabetes) வழிவகுக்கும்.
காலை உணவு எடுத்துக்கொள்ளாவிட்டால் மூளைக்கு தேவையான கலோரிகள் இல்லாமல், யோசிக்கும் மற்றும் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். எந்த ஒரு வேளையிலும் முழுமையாக ஈடுபட முடியாது. சில பொதுவான காலை உணவுகள், தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது, இதய நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி,புதுடெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகேஷ் கோயல், கீழ்கண்ட 5 காலை உணவுகளை தவிர்க்க அறிவுறுத்துகிறார்.
அதிக சர்க்கரை கொண்ட காலை உணவுகள்
அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகள் நமக்கு உடனடி சக்தியை வழங்கலாம். ஆனால் அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவில் வேகமான உயர்வு ஏற்படுகிறது. இது இன்சுலின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்
பதப்படுத்தப்பட்ட இறைட்சி உணவுகளில் அதிக அளவிலான கொழுப்பு மற்றும் சோடியம் இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால், இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
டோனட்ஸ் போன்ற பேக்கரி உணவுகள்
இவற்றில் அதிக அளவில் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் கொண்டவை. இதில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள், ‘கெட்ட’ கொழுப்பை அதிகப்படுத்தி, ‘நல்ல’ கொழுப்பை குறைக்கின்றன. இதனால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
கிரீம் சீஸ்
இது அதிக அளவில் ஒழுங்கற்ற கொழுப்புகளை கொண்டுள்ளது. இந்த பொருட்களை காலை உணவாக எடுத்துக்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, அதிரோஸ்க்லெரோசிஸ் (Atherosclerosis) என்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த பாதிப்பானது தமனியின் உட்புற சுவர்களில் கொழுப்பு, கொலஸ்டிரால், இரத்த அணுக்கள் மற்றும் பிற பொருட்கள் சேர்ந்து பிளேக் (plaque) எனப்படும் தடிப்புகளை உருவாக்கி, தமனிகளில் அடைப்புகளை ஏற்படுத்தும்.
நான்டேரி கிரீம்கள்
இவற்றில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் மற்றும் செயற்கையான சுவையூட்டிகள் கொண்டவை, இது இதய நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)