Heart Health: இளம் வயதில் மாரடைப்பு பயமா..? இந்த விஷயங்கள் இதயத்தை பாதுகாக்கும்!
Heart Disease Risk: அதிகப்படியான சோடியம், அதிக அளவில் எண்ணெய் உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் இதயத்தில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது முக்கியம்.

உலகம் முழுவதும் நாளுக்குநாள் இதய நோய்களுக்கான ஆபத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இளம் வயதினர் கூட மாரடைப்பு (Heart Attack) பிரச்சனையால் இறக்கின்றனர். இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகள் முக்கிய காரணங்கள் என்று கூறபப்டுகிறது. இதன் காரணமாக அனைத்து மக்களும் எப்போதும் தங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். 30 வயதுக்குட்பட்டவர்களிடம் தற்போதைய காலத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் (Cholesterol) பிரச்சனைகள் காணப்படும் விதம் ஆபத்தானது.
இந்த காலத்தில் அதிகப்படியான சோடியம், அதிக அளவில் எண்ணெய் உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் இதயத்தில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது முக்கியம். சில பழக்கவழக்கங்களையும் நடவடிக்கைகளையும் பின்பற்றுவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை 70% குறைக்கலாம்.
ஆரோக்கியமான உணவு:
தினமும் பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமானவற்றை எடுத்துகொள்வது நல்லது. இதுபோன்ற உணவு பொருட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. மீன், ஆளி விதைகள் மற்றும் வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உடலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இவற்றை உட்கொள்வது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
புகைபிடித்தல், மது அருந்துதல்:
இன்றைய கால இளைஞர்களிடம் புகைபிடித்தல் பழக்கம் அதிகளவில் உள்ளது. இது மாரடைப்பு பிரச்சனையை உண்டாக்கும். அதே நேரத்தில், அதிகப்படியான மது அருந்துதல் இரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்கும். இந்த இரண்டு மோசமான பழக்கத்தையும் தவிர்ப்பதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இரத்த அழுத்தம்:
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் அடிக்கடி இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைத் தொடர்ந்து பரிசோதிப்பது நல்லது. இவற்றைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
எடை கட்டுப்பாடு:
சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் உதவியுடன் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்க மெனக்கிடுவது முக்கியம். அதிகப்படியான எடை மற்றும் கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தலாம்.
தண்ணீர் குடித்தல்:
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சீரான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இது இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடல் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)