Headache vs Migraine: தலைவலிக்கும் ஒற்றை தலைவலிக்கும் என்ன வித்தியாசம்..? இதை அறிந்துகொள்வது எப்படி..?
Migraine Symptoms: பொதுவான தலைவலி, பதற்றம் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படலாம், அதேசமயம் ஒற்றைத் தலைவலி கடுமையான, துடிக்கும் வலியாக இருக்கும், வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். இந்தக் கட்டுரை தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இடையேயான முக்கிய வேறுபாடுகளை விளக்குகிறது.

தலைவலி (Headache) என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் வரும்போது தலைவலியும் உங்கள் மீது தாக்குதல் நடத்தும். தலையின் எந்த பகுதியிலும் ஏற்படும் சிறிய வலியை சாதாரண தலைவலி என்று எடுத்து கொள்ளலாம். அதேநேரத்தில், தலையின் ஒரு பாதியின் ஏற்படும் கடுமையான வலி, தலைச்சுற்றல், வாந்தி அல்லது தோள்பட்டை வலி போன்றவை ஒற்றை தலைவலியை (Migraine) குறிக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு ஒற்றை தலைவலிக்கும், தலைவலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தெரியவில்லை. அந்தவகையில், சாதாரண தலைவலி மற்றும் ஒற்றை தலைவலிக்கு என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பொதுவான தலைவலி:
தலையின் எந்த பகுதியிலும் வலி ஏற்படுவது ஒரு பொதுவான தலைவலியாகும். இது முழு தலையிலும் வலியை ஏற்படுத்தும். இதற்கு என்று வரையறுக்கப்பட்ட வரம்பு என்று எதுவும் கிடையாது. எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்லவும் முடியாது. பொதுவாக இத்தகைய தலைவலிகள் பிரச்சினைகள், பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவைகளால் ஏற்படும்.
தலைவலியில் பல வகைகள் உண்டு. இவை டென்ஷன் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, சைனஸ் தலைவலி என்று கூறப்படுகிறது.
உங்களுக்கும் அடிக்கடி தலைவலி வருகிறதா?
உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், அது மூளை கட்டியின் அபாயமாக இருக்கலாம். தலைவலி தான் அதன் பொதுவான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலையில் தலைவலி அல்லது தொடர்ந்து தலைவலி இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது. அனைத்து மூளை கட்டிகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம், அது தீவிரமாக மாறுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.
ஒற்றை தலைவலி:
ஒற்றை தலைவலி காரணமாக ஏற்படும் தலைவலி இந்த காலத்தில் பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த வலி ஒவ்வொரு மாதமும் பல முறை ஏற்படலாம். இது ஒரு முறை ஏற்பட்டால் 4 மணிநேரம் முதல் 3 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். ஒற்றை தலைவலி தலையின் எந்த பகுதியிலும் உணரப்படலாம். இதனுடன் தலை சுற்றல், வாந்தி, பசியின்மை, வயிற்றி அசௌகரியம் மற்றும் தோள்பட்டையில் வலி போன்றவற்றை கொடுக்கும்.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களில் சுமார் 15-17% பேர் ஒற்றை தலைவலி பிரச்சனையால் போராடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஒற்றை தலைவலி வருவதற்கு முன்பே மலச்சிக்கல், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், மது அருந்துதல் அல்லது மாதவிடாய சுழற்சி காரணமாகவும் ஒற்றை தலைவலி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைவலி பிரச்சனை பல வருடங்கள் நீடிக்கும். உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நம் வாழ்க்கையை மோசமாகப் பாதிக்கிறது. சிறந்த சிகிச்சை மூலம், ஒற்றைத் தலைவலி பிரச்சனையை பெருமளவில் குறைக்க முடியும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)