குடல் பிரச்னையை சரி செய்ய எடுக்க வேண்டிய உணவுகள் – தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Gut Health: மாறிவரும் சூழ்நிலையில் குடல் சம்மந்தமான பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடல் ஆரோக்கியம் மேம்பட எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த பதிவில் காணலாம்.

மாதிரி புகைப்படம்
வாழ்க்கை முறைகள் மாறி வரும் சூழலில் இளம் வயதிலியே உடல் சார்ந்த பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பெரும்பாலானோருக்கு அல்சர்(Ulcer) போன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் அதிகரித்திருக்கிறது. கடினமான பணி சூழல், மன அழுத்தம், போதுமான தூக்கம் இன்மை போன்றவை வயிறு சம்மந்தமான பிரச்னைகளை அதிகரிக்க காரணமாக இருந்திருக்கின்றன. மேலும் உடல் உழைப்பு குறைந்துள்ள சூழ்நிலையில் தேவைக்கு அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்வதும் இதற்கு காரணம். மேலும் ஜங்க் ஃபுட்களை (Junk Foods) சாப்பிடுவது, எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக்கொள்வது, மிகவும் காரமான பொருட்களை சாப்பிடுவது, சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது இதற்கு காரணம். ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டால் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தக் கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும். சரியான நார்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, தயிர், மோர் போன்ற ப்ரோபயாட்டிங் உணவுகளை எடுத்துக்கொள்வது போன்றவை குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். குடல் அமைப்பு மிகவும் சிக்கலானது. அதனை முறையாக பராமரிப்பது அவசியம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
தயிர், மோர், பழைய சாதம் போன்ற பொருட்களில் உள்ள ப்ரோபயோட்டிக் நுண்ணுயிரிகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நார்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்கள் ஆகியவை குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்டவற்றில் நார் சத்து அதிகம் என்பதால் அவற்றை எடுத்துக்கொள்வதும் சிறந்ததது. பிரௌன் ரைஸ் எனப்படும் பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றில் நார் சத்து அதிகம். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் சாப்பாட்டை மொத்தமாக 3 வேளைக்கு சாப்பிடாமல் பிரித்து 4 அல்லது 5 வேலைகளாக சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
உணவில் அதிக உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது அவை இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இதனால் உங்கள் குடல் பகுதி பாதிப்படையும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் குறைவான நார்சத்து கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை உங்கள் செரிமானத்தை சிக்கலாக்கும். எண்ணெயில் அதிகம் வறுக்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை உடல் எடையை அதிகரிப்பதோடு செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும். சரியான அளவு நம் உடலுக்கு நல்ல பலன்களை அளிக்கும். போதுமான தூக்கம் முக்கியமானது. குடல் சம்மந்தப்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.