கோடையில் ஃபிட்டாக இருக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் !
Summer Tips : பொதுவாக கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்ய தவறுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் குறைகள் ஏற்படலாம். கோடைகாலத்தில் செய்யக் கூடிய எளிய உடற்பயிற்சிகள் மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கோடையில் (Summer) வெப்பம் அதிகமாக இருப்பதால், உடற்பயிற்சி செய்ய பலருக்கும் சிரமமாக இருக்கலாம். வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உடல் தளர்வு மற்றும் சோர்வு ஏற்படும். இதனால் மருத்துவர்கள் (Doctor), இந்த காலகட்டத்தில் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்க்குமாறும், அதே நேரத்தில் உடலை பராமரிக்க எளிய பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறார்கள். கோடைகாலத்துக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்வதும் அவசியம். குறிப்பாக உடற்பயிற்சிகளை முற்றிலும் தவிர்ப்பதும் நல்லதல்ல. இது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே கோடைகாலத்தில் ஏற்ற முறையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த நிலையில், வெப்பத்தில் சோர்வடையாமல், ஆரோக்கியமாக இருக்க சில எளிய பயிற்சி முறைகள் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கோடைகாலத்தில் செய்ய வேண்டிய எளிய உடற்பயிற்சிகள்
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் ஆகியவை மிகச் சிறந்த பயிற்சிகள் ஆகும். இதன் மூலம், இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். இருப்பினும் கோடைகாலத்தில் அதிகபட்சம் அரைமணி நேரம் இந்த பயிற்சியை மேற்கொள்வது சரியானதாக இருக்கும்.
நீச்சல் என்பது ஒரு முழு உடல் பயிற்சியாகும். இது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் பயனுள்ளது. இந்த பயிற்சியின் மூலமாக, தசைகள் உறுதிப்படுகின்றன. நீச்சல் பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கும் பலன் தருகிறது. கோடைகாலத்தில் வெப்பத்தை குறைக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நீச்சல் பயிற்சி சிறந்தது.
கோடைகாலத்தில், யோகா மற்றும் பிராணாயாமா பயிற்சிகளை மேற்கொள்ளுதல் மிகவும் பயனுள்ளதாகும். இந்த பயிற்சிகள் உடலை டிடாக்ஸ் செய்வதோடு மன அழுத்தத்தை குறைக்கும்.
கோடை காலத்தில் வெயில் காரணமாக வெளியில் பயிற்சி செய்ய முடியாமல் போனால், வீட்டில் உள்ள சிறிய இடத்தில் கூட பல பயிற்சிகளை செய்ய முடியும். உதாரணமாக, புஷ்-அப்ஸ், ஸ்குவாட்ஸ் போன்ற பல உடற்பயிற்சிகளை செய்து முழுமையான பலனை பெற முடியும்.
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
வெப்பத்தில் அதிகமாக அதிகமாக வியர்வை வெளியேறுவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படும்.இதனால் அடிக்கடி நீர் பருகுவது அவசியம். உடற்பயிற்சி செய்யும் போது வெப்பம் குறைவாக இருக்க உதவும் காட்டன் போன்ற இலகுவான உடைகளை அணிய வேண்டும். அதிக வெப்பமான நேரங்களான 11 மணி முதல் 4 மணி வரை வீட்டிற்கு வெளியில் பயிற்சி செய்வதை தவிர்க்கவும். பச்சை காய்கறிகள், பழங்கள், தயிர் ஆகியவை உடல் சூட்டை தணிக்கும். கோடைகாலங்களில் உடலை பராமரிப்பது சவாலானது என்றாலும் இதுபோன்ற எளிய வழிமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)