300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Chicken Consumption Warning: சிக்கன் உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படும் ஆரோக்கியமான புரத உணவாக கருதப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வில் வாரத்திற்கு 300 கிராம் அல்லது அதற்கு அதிகமாக சிக்கன் சாப்பிடுவது மரண அபாயத்தையும் குடல் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கிறது. சிக்கன் உட்பட எந்தவொரு இறைச்சியையும் குறைவான அளவு உண்பது முக்கியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் அதிகம் உணவாக பயன்படுத்தப்படும் இறைச்சி என்றால் அது சிக்கன் (Chicken) தான். சுவை, எளிதாக சமைக்க முடிவது மற்றும் அதில் உள்ள அதிக புரோட்டீன் (Protein) ஆகியவை உலக அளவில் விருப்பமான உணவாக கருதப்படுதற்கான காரணங்கள். சிக்கனில் முக்கியமான, உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி12 (Vitamin B12) போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் வயதானவர்களின் அறிவுசார் செயல்பாடுகளுக்கு இவை உதவுகின்றன. இந்நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று, சிக்கன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில் வாரத்திற்கு 300 கிராம் அல்லது அதற்கு அதிகமாக சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. பொதுவாக சிக்கன் ஒரு ஆரோக்கியமான புரத உணவாக கருதப்பட்டாலும், அளவுக்கு மீறி உண்பது அபாயகரமாக இருக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.
இது தொடர்பாக நியூட்ரியன்ட்ஸ் என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், வாரத்திற்கு 300 கிராம் மற்றும் அதற்கு அதிகமாக வெள்ளை இறைச்சி (White Meat) உண்பவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிக மரண அபாயத்திற்கும், குடல் புற்றுநோய் (Gastrointestinal Cancer) அபாயத்திற்கும் ஆளாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களிடம் இந்த அபாயம் பெண்களைவிட அதிகமாக காணப்பட்டது.
ஆய்வு என்ன சொல்கிறது?
அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களின் படி ஒருவர் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை சுமார் 100 கிராம் அளவு மட்டுமே வாத்து, கோழி, வான் கோழி போன்ற உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மீறி வாரத்திற்கு 300 கிராம் அல்லது அதற்கு மேல் சிக்கன் சாப்பிடுபவர்கள் மரண அபாயம் மற்றும் குடல் புற்றுநோய் அபாயத்தை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக இவ்வாய்வு கூறுகிறது. குறிப்பாக, அதிகமாக சிக்கன் சாப்பிடுபவர்களில் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகமாக இருந்தது.
இந்த ஆய்வு மேலும் குறிப்பிடுவது என்னவெனில், அதிக அளவில் சிக்கன் அல்லது வெள்ளை இறைச்சி உண்ணும் பழக்கம், கடந்த காலத்தில் ரெட் மீட் எனப்படும் சிவப்பு இறைச்சி மற்றும் பிராசஸ்டு சிக்கன்களால் ஏற்பட்ட ஆரோக்கியப் பிரச்னைகளுடன் ஒத்துப்போவதாக தெரியவந்துள்ளது. இதனால் மேற் சொன்ன அளவைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
ஆயினும், இது ஆரம்ப கட்ட ஆய்வு என்பதால், மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் என்றும், பிரசாசஸ்டு சிக்கன் வகைகள் மற்றும் உடற்பயிற்சி போன்ற பிற வாழ்க்கை முறைகளை பற்றியும் ஆராய்வது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)