சிசேரியனுக்கான காரணம்? யாருக்கு மேற்கொள்ளப்படும்? – தனுஷின் அக்கா பகிர்ந்த வீடியோ!
Common Reasons for Cesarean: இந்தியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சிசேரியன் என்ற சிகிச்சை முறை மிகவும் சிக்கலானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிசேரியன்கள் ஏன் செய்யப்படுகின்றன? அதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை தனுஷின் சகோதரியும் பிரபல மகப்பேறு மருத்துவருமான கார்த்திகா விரிவாக விளக்குகிறார்.

மருத்துவர் கார்த்திகா
இந்தியாவில் (India) ஒரு குழந்தை பிறப்பது என்பது பெரும்பாலும் சவாலானதாகவே இருக்கிறது. மேலும் மருத்துவ ரீதியாக பெரும் சிக்கல்கள் கொண்டதாக இருக்கிறது. காரணம் பலருக்கு அது குறித்த புரிதல் இல்லை என்பதுதான். போதிய அரசு மருத்துமனைகள் (Government Hospitals) இல்லாதது, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் என பலரும் கடைசி கட்டத்தில் அவசர நிலைகளை எதிர்கொள்கின்றனர். சிசேரியன் (Cesarean) என்பது பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் சவாலானதாக மாறுகிறது. குழந்தைகளுக்கு அவர்களுக்கு தேவையான சத்தான ஆகாரங்கள் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வருவதால் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியான அறிவுரைகள் கிடைப்பதில்லை.
சிசேரியனுக்கான முக்கியத்துவம்
ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இயற்கை வழியாக குழந்தையை பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் குழந்தையை வெளியேற்றுவதைச் சிசேரியன் என்று அழைக்கிறார்கள். இதன் மூலம் சில சிக்கலான நேரங்களில் குழந்தை மற்றும் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியும். சாதாரண டெலிவரியைவிட சிசேரியனால் பெண்களின் உடலுக்கு நேரும் பாதிப்பு அதிகம். உடல்நலம் மேம்பட நீண்ட நாட்கள் தேவைப்படும்.சிசேரியன் என்பது ஒரு முக்கியமான மருத்துவ தீர்வாகவே பார்க்கப்படுகிறது. இது பயப்பட வேண்டிய விஷயம் அல்ல, தேவையின்றி யாருக்கும் இது தேர்வு செய்யப்படாது. மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே எந்த விதமான பிரசவம் பொருத்தமானது என்பதை தீர்மானிக்க வேண்டும்.
சிசேரியன் ஏன் செய்யப்படுகின்றன?
நடிகை தனுஷின் சகோதரியும் பிரபல மகப்பேறு மருத்துவருமான டாக்டர் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிசேரியன் செய்யப்படுவதற்கான காரணங்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, நடைமுறையில் சிசேரியனுக்கான பொதுவான காரணங்களை பார்க்கலாம். பெரிதாக பாதிப்பு இல்லாத கர்ப்பிணி பெண்கள், குழந்தை பிறப்பதாக சொல்லப்பட்ட தேதிக்கு பிறகும் வலி ஏற்படவில்லை என்றாலோ அல்லது பனிக்குடம் உடையவில்லை என்றாலோ உங்களுக்கு சிசேரியன் செய்யப்படலாம். அதே மாதிரி அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணி பெண் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டவர் குறிப்பாக இன்சுலின் போட்டும் இரத்த சர்க்கரை குறையாமல் இருப்பது, இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சில வகை இதய நோய்கள் உள்ளவர்கள், அந்த நேரத்தில் நார்மல் டெலிவரி வாய்ப்பு இல்லாத போது சிசேரியன் செய்வோம்.
சிலருக்கு சரியான நேரத்தில் வலி வந்தாலும், குழந்தையில் தலை இறங்காமல் இருப்பது, தலை சரியாக திரும்பாமல் இருப்பது, தலை இறங்கி வந்தாலும் வேக்யூம் போட வேண்டிய சூழல் இருந்தாலும், குழந்தையின் இதய துடிப்பில் மாறுபாடு தெரிந்தாலோ எமர்ஜென்சி அடிப்படையில் சிசேரியன் செய்யப்படும். நஞ்சுக்கொடி கீழே இருக்கு, இரட்டை குழந்தைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்பில் இருந்தாலோ, நஞ்சு கொடி பிரிகிற மாதிரி இருந்தாலோ, குந்தையின் உருவம் சிறியதாக இருந்தாலோ இது போன்ற பல காரணங்களால் சிசேரியன் செய்யப்படும் என்றார்.