அன்பே சிவம் வாய்ப்பை நிராகரித்த கே.எஸ்.ரவிக்குமார் – அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
அன்பே சிவம் படம் கூட வெளியான போது கொண்டாடப்பட வில்லை. அந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர.சிக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் அதன் பிறகு தானே தயாரிப்பாளராக மாறி கிரி என்ற படத்தை இயக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார்
நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) பெரும்பாலான படங்கள் மிகவும் தாமதமாகவே மக்களால் புரிந்துகொள்ளபட்டிருக்கிறது. அதன காரணமாக அவரது படங்கள் வெளியான போது தோல்வி அடைந்திருந்தாலும் கிளாசிக் லிஸ்டில் இடம் பிடித்திருக்கின்றன. உதாரணமாக குணா படம் வெளியான போது தோல்வி படமாகவே அமைந்தது. ஆனால் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலும், கொடைக்கானலில் அந்தப் படமாக்கப்பட்ட இடமும் கடந்த ஆண்டின் அதிகம் வசூலித்த ஒரு சூப்பர் ஹிட் படம் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. மஞ்சுமல் பாய்ஸ் (Manjummel Boys) என்ற அந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு (Kodaikanal) சுற்றுலா வருகிறார்கள். அப்போது குணா படம் படமாக்கப்பட்ட குணா குகையைக் காண அவர்கள் செல்ல, அதில் ஒருவர் குகைக்குள் இருந்த குழிக்குள் விழுந்துவிடுகிறார். அவரை நண்பர்கள் இணைந்து எப்படி மீட்கின்றனர் என்பதே அந்தப் படத்தின் கதை. கண்மணி அன்போடு என்ற குணா பாடல் படத்தின் வெற்றிக்கு பெரும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குணா படம் தான், இயக்குநர் செல்வராகவன் – தனுஷின் காதல் கொண்டேன் படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள காரணமாகவும் அமைந்தது என சொல்லலாம். கிட்டத்தட்ட காதல் கொண்டேன் கதையும் அதே தான். குணா படத்தை தாமதமாக மக்கள் புரிந்துகொண்டதன் காரணமாக மக்கள் அதே போன்ற கதை கொண்ட காதல் கொண்டேனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
தமிழில் பல ஆக்சன் படங்களுக்கு கமலின் ‘சத்யா’ முன்னோடியாக இருந்திருக்கிறது. ஆக்சன் ஹீரோ என்றாலே கையில் காப்பு அணிவது என்பது சத்யாவுக்கு பிறகு சொல்லப்படாத ஃபார்முலாவாக மாறியது. அதே போல இரண்டு வெவ்வேறு அரசியல் புரிதல்கள், ஐடியாலஜி கொண்ட இருவர் இணைந்து பயணிக்கும் அன்பே சிவம் தான் சமீபத்தில் கார்த்தி – அரவிந்த் சாமியின் நடிப்பில் வெளியான மெய்யழகன்.
அன்பே சிவம் தோல்வியால் தயாரிப்பாளராக மாறிய சுந்தர்.சி
கமலின் விருமாண்டி தான் தனது பருத்தி வீரனுக்கு இன்ஸ்பிரேஷன் என பல பேட்டிகளில் இயக்குநர் அமீர் தெரிவித்திருக்கிறார். இப்படி பல படங்களை சொல்லலாம். கமல் தமிழ் சினிமாவின் தரத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனையையும் மாற்றியிருக்கிறார். அன்பே சிவம் படம் கூட வெளியான போது கொண்டாடப்பட வில்லை. அந்தப் படத்தின் தோல்வியினால் இயக்குநர் சுந்தர.சிக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் அதன் பிறகு தானே தயாரிப்பாளராக மாறி கிரி என்ற படத்தை இயக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவருக்கு அன்பே சிவம் தான் அடையாளமாக மாறியிருப்பதாகவும் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்பே சிவம் படத்தை நிராகரித்த கே.எஸ்.ரவிக்குமார்
தெனாலி படத்தின்போதே முதலில் அன்பே சிவம் கதையைத் தான் கமல், கே.எஸ்.ரவிக்குமாருக்கு பரிந்துரைத்திருக்கிறார். அப்போது மாதவனுக்கு பதிலாக ஜெயராம் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் படத்தின் கிளைமேக்ஸை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த கதையை கே.எஸ்.ரவிக்குமார் தவிர்த்திருக்கிறார். பின்னர் அந்தப் படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது. அதற்கான அறிவிப்பும் செய்தித்தாள்களில் வெளியானது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலக இயக்குநர் சுந்தர்.சி ஒப்பந்தமானார்.
கமல் குறித்து அன்பே சிவம் தயாரிப்பாளர்
தனக்காக அன்பே சிவம் படத்தில் நடித்துக்கொடுத்த மாதவனை ஹீரோவாக வைத்து நள தமயந்தி படத்தை தயாரித்தார் கமல். அந்த படம் வெற்றிபெற அதனை ஹிந்தியில் ரீமேக் செய்தார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பே சிவம் படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பாக முரளி தரண், சாமிநாதன், வேணுகோபால் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் முரளிதரண் சாய் வித் சித்ரா என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ”அன்பே சிவம் எங்களுக்கு வியாபரமாக சரியாக போகவில்லை என்றாலும் கமல் சார் எங்களுக்கு பெரிய ஹெல்ப் பண்ணார். அந்த விஷயங்களை எல்லாம் மறக்க முடியாது. அவர் இந்த அளவுக்கு செய்வார் என யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். 50 சதவிகிதத்திற்கு மேலு் அவர் சம்பளம் வாங்கவில்லை. வியாபாரமானால் கொடுங்கள்” என்றார்.