பிறமொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள் ! இவ்ளோ படங்களா?
பொதுவாக விஜய் மீது அவர் அதிகமான ரீமேக் படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. காரணம் அவரது நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற பல படங்கள் ரீமேக் படங்கள். ஆனால் அவரது படங்கள் பிற மொழிகளில் வெளியாகி பல ஹீரோக்களுக்கு கைகொடுத்திருக்கின்றன.

தளபதி விஜய்
தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் (Vijay) தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு மிகப்பெரும் கமர்ஷியல் ஹீரோவான விஜய்யிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக விஜய் நடிப்பில் வெளியான சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அவரது படங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக இருந்துவருகிறது. இந்த நிலையில் அவரது அரசியல் பயணத்தின் காரணமாக ஓயவை அரிவித்திருப்பது அவர்களுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது 60வது படம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் (Social Media) வெளியாகி வந்தாலும் இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பொதுவாக விஜய் மீது அவர் அதிகமான ரீமேக் படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. காரணம் அவரது நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற பல படங்கள் ரீமேக் படங்கள். ஆனால் அவரது படங்கள் பிற மொழிகளில் வெளியாகி பல ஹீரோக்களுக்கு கைகொடுத்திருக்கின்றன. அப்படி பிறமொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பூவே உனக்காக
விஜய்க்கு முதல் சில்வர் ஜூப்ளி படமாக அமைந்தது பூவே உனக்காக. விஜய் ஹீரோவாக அறிமுகமாகி 4 ஆண்டுகள் கழித்து வெளியான இந்தப் படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையு் கவர்ந்தது. விஜய்யின் தேவா படத்தின் பாடல்களைப் பார்த்து அவரை இந்தப் படத்துக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் விக்ரமன். பூவே உனக்காக படத்தில் இவரை நடிக்க வைக்க முடிவு செய்தபோது அந்தப் படத்தில் நடித்த ஒரு சீனியர் நடிகர், விக்ரமனிடம் கார்த்திக் போன்ற ஹீரோ தான் இந்தக் கதைக்கு சரியாக இருக்கும். அவருக்கு சரிவராது என்றிருக்கிறார். ஆனால் விஜய் நடித்ததை பார்த்த பிறகு அந்த சீனியர் நடிகர் தன் முடிவை மாற்றிக்கொண்டாராம். இந்தப் படம் தெலுங்கில் இந்தப் படம் தெலுங்கில் ஜெகபதி பாபு நடிப்பில் சுபகானக்ஷலு (Subhakankshalu) என்ற பெயரிலும் கன்னடத்தில் ஈ ஹிருதய நினகாகி (Ee Hirudaya Ninagagi) என்ற பெயரிலும் அனில் கபூர் நடிப்பில் ஹிந்தியில் பதாய் ஹோ பதாய் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
Love Today
பாலசேகரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பூவே உனக்காக படத்துக்கு பிறகு ஒரு நல்ல வெற்றிபடமாக அமைந்தது. இந்தப் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் சுஸ்வாகதம் (Suswagatham) என்ற பெயரிலும் ஹிந்தியில் கியா யெஹி பியார் ஹை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
ஒன்ஸ்மோர் (Once More)
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், சிவாஜி கணேசன், சரோஜா தேவி, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான படம் ஒன்ஸ்மோர். சிவாஜி கணேசன், சரோஜா தேவி இணைந்து நடித்த இருவர் உள்ளம் படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளும் இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடிப்பில் டேடி டேடி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
பிரியமுடன்
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் கௌசல்யா நடித்த இந்தப் படம் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியானது. விஜய் முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். இந்தப் படம் தெலுங்கில் பிரேமிஞ்சே மனசு (Prminche Manasu) என்ற பெயரிலும் ஹிந்தியில் கோவிந்தா நடிப்பில் தீவானா மெயின் தீவானா (Deewana Main Deewana) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
துள்ளாத மனமும் துள்ளும்
விஜய், சிம்ரன் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் பெரும் வெற்றிபெற்றது. எழில் இயக்குநராக அறிமுகமான இந்தப் படம். நாகர்ஜூனா நடிப்பில் நுவ்வு வஸ்தாவனி (Nuvvu Vasthavani) என்ற பெயரிலும் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பில் ஓ நன்னா நல்லே (O Nanna Nalle) என்ற பெயரிலும் பெங்காலியில் சாதி (Sathi) என்ற பெயரிலும் ஒடியாவில் ஐ லவ்யூ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
குஷி
கண்ணுக்குள் நிலவு, என்றென்றும் காதல், மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே என நான்கு தோல்விகளுக்கு பிறகு இந்தப் படம் தனக்கு வெற்றிப்படமாக அமைந்ததாக இசை பட நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஜோதிகாவுக்கு பதிலாக பூமிகா அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியிலும் குஷி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எஸ்.ஜே.சூர்யாவே இயக்கியிருந்தார். கன்னடத்தில் கணேஷ், பிரியாமணி நடிப்பில் ஏனோ ஒன்தாரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
பகவதி
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் முழு நீள ஆக்சன் படம். இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான ஜெய் இந்தப் படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகியிருந்தார். இந்தப் படம் கன்னடத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் காஷி ஃபிரெம் வில்லேஜ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
திருமலை
தொடர் தோல்விகளுக்கு பிறகு விஜய்க்கு ஆக்சன் ஹீரோவாக புது அவதாரத்தை அளித்த படம். கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குநர் ரமணா இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். குஷி படத்துக்கு பிறகு விஜய் – ஜோதிகா இணைந்து நடித்த படம். இந்தப் படம் தெலுங்கில் சுமந்த் நடிப்பில் கௌரி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
திருப்பாச்சி
பேரரசு இயக்கத்தில் விஜய் திரிஷா நடிப்பில் கநடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம். இந்தப் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் அன்னாவரம் என்ற பெயரிலும் கன்னடத்தில் தங்கிகாகி (Thangigagi) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
சிவகாசி
திருப்பாச்சி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இயக்குநர் பேரரசு இணைந்த படம். அசின் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்தப் படம் தெலுங்கில் கல்யாண் ராம் நடிப்பில் விஜயதசமி (Vijayadasami) என்ற பெயரிலும் பெங்காலியில் ஆமர் பிரதிக்யா(Amar Pratigya) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்த முதல் படம். இந்தப் படம் தமிழில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் என கூறப்படுகிறது. முதன்முறையாக விஜய் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். இந்தப் படம் முதலில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவிருந்தது. அவரது கால்ஷீட் கிடைக்க தாமதமானதால் தமிழில் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். பின்னர் அக்ஷய் குமார் நடிப்பில் தி ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
ஜில்லா
விஜய் – மோகன்லால் இணைந்து நடித்த படம். விஜய்யின் வழக்கமான கமர்ஷியல் பார்முலாவில் வந்த ஹிட்டடித்த படம். இதனுடன் அஜித்தின் வீரம் படமும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஒடியாவில் பஜ்ரங்கி (Bajrangi) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
கத்தி
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியான படம். இந்தப் படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கைதி 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
தெறி
அட்லி – விஜய் காம்பினேஷனில் வந்த முதல் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியல் ரீதியாக ஹிட்டடித்தது. இந்தப் படம் ஹிந்தியில் வருண் தவான் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அட்லி இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.