என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு… வைரலாகும் விஜய் ஆண்டனியின் அறிக்கை!

Vijay Antony: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் விஜய் ஆண்டனி தற்போது ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு என்று தெரிவித்துள்ளார்.

என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... வைரலாகும் விஜய் ஆண்டனியின் அறிக்கை!

விஜய் ஆண்டனி

Published: 

28 Apr 2025 21:35 PM

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர்  என தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டி வலம் வருகிறார் விஜய் ஆண்டனி (Vijay Antony). இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா நாயகனாக நடித்திருந்த நிலையில் நடிகர் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தான் இசையமைத்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆனார். அதன்படி 2012-ம் ஆண்டு நான் என்ற படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்திருந்தார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இவரை முதல் படத்திலேயே ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள் நடிகராகவும் இவரை முதல் படத்திலேயே வரவேறனர்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பது, பாடல்கள் பாடுவது, படங்களில் நடிப்பது, படங்களை தயாரிப்பது என்று தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதில் அவர் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் இறுதியாக 2024-ம் ஆண்டு இயக்குநர் தனா இயக்கதில் ஹிட்லர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

விஜய் ஆண்டணி நடிப்பில் இறுதியாக வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், காக்கி, சக்தி திருமகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து இந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்னதாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவுக்கு எதிர்ப்புகள் பல குவிந்துவந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னுடைய பதிவை தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கு…

விஜய் ஆண்டனி தற்போது வெளியிட்ட பதிவு:

காஷ்மீரில் நடந்த கொடூரமான படுகொலை, ஒற்றுமையின் வலுவான பிணைப்பை உடைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கொடூரமான பயங்கரவாதக் குழுவால் செய்யப்பட்டது. இந்திய அரசாங்கமும், இந்தியர்களாகிய நாமும், நமது இறையாண்மையை வலிமையான கரத்தால் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏப்ரல் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது. தாக்குதலைக் கண்டித்தும், துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும் அவர் வெளியிட்ட பதிவில் ஒரு குறிப்பிட்ட கருத்து நெகட்டிவான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

விஜய் ஆண்டனி வெளியிட்ட முந்தைய பதிவு:

அவர் அந்த பதிவில் கூறியதாவது, “காஷ்மீரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் இது ஒரு வேதனையான தருணம். அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள 50 லட்சம் இந்தியர்களைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும், அவர்கள் நம்மைப் போன்ற பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து அமைதியையும் மகிழ்ச்சியையும் தேடுகிறார்கள். வெறுப்பை விட அன்பையும் மனிதநேயத்தையும் தேர்ந்தெடுப்போம்” என்று அதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.