‘அப்போ எனக்கு புரியல, தப்பு பண்ணிட்டேன்’ – சேதுபதி பட காட்சிக்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர்

இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் எஸ்எஸ் மியூசிக் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசனை அடித்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.யு.அருண் குமார், ''அடித்தாரா என்று நினைவில்லை. அடித்திருந்தால் அது தவறு.

அப்போ எனக்கு புரியல, தப்பு பண்ணிட்டேன் - சேதுபதி பட காட்சிக்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர்

விஜய் சேதுபதி - எஸ்.யு.அருண் குமார்

Published: 

05 Apr 2025 18:47 PM

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் (Vikram), துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியான வீர தீர சூரன் (Veera Dheera Sooran) படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விக்ரமிற்கு ஒரு நல்ல வெற்றிப் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.  சித்தா மாதிரியான ஒரு படத்துக்கு பிறகு இப்படி ஒரு ஆக்சன் எண்டர்டெயினரை இயக்குநர் அருண் குமாரிடம் இருந்து யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பாக தயாரித்திருக்கும் ரியா ஷிபு இளம் தயாரிப்பாளராக அறியப்பட்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, ”ஒரே ஒரு வாழ்க்கை, வரலாறா வாழுங்க அப்படினு ஒருத்தன் ஈஸியா சொல்லிட்டு போய்டார்.  ‘வீர தீர சூரன்’ படத்தின் ரிலீஸுக்கு முன்னால் பார்த்தவர்கள் இந்தப் படம் பெரிய பிளாக்பஸ்டராக போது, மாஸா இருக்கு அப்படிலாம் சொன்னாங்க. ஆனா படத்தை 4 வாரத்துக்கு ரிலீஸ் பண்ண கூடாதுனு நீதிமன்றம் தடை பண்ணிட்டாங்க.

‘முதல் ஷோ கேன்சல் ஆச்சுனா அந்தப் படம் ஓடாதுனு சொன்னாங்க’

இந்த படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கணும்னு நினச்சேன். ஒரு படம் முதல் ஷோ கேன்சல் செய்யப்பட்டால் அந்தப் படம் ஓடாது என்ற நம்பிக்கை இருக்கு. ஆனால் எங்க படத்துக்கு இரண்டு ஷோ கேன்சல் ஆகி சாயந்தரம் தான் படம் ரிலீஸ் ஆச்சு.  அந்தப் படம் தியேட்டருக்கு வந்து குடும்பங்கள் கொண்டாடுறாங்க. நாங்க நினச்சது நடந்துடுச்சு என்று பேசியிருந்தார்.

வருத்தம் தெரிவித்த இயக்குநர்

 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் எஸ்எஸ் மியூசிக் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசனை அடித்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.யு.அருண் குமார், ”அடித்தாரா என்று நினைவில்லை. அடித்திருந்தால் அது தவறு. ஆனால் மற்றொரு காட்சியில் ரம்யா நம்பீசன், ‘அவன் அடிச்சான்னா, நாளைக்கு வந்து கொஞ்சுவான்’ அப்படினு ஒரு வசனம் இருக்கும். அதுதான் தப்பு. அப்போ எனக்கு விவரம் புரியல. தெரியாம அந்த காட்சியை படத்தில் வச்சுட்டேன். ஆனால் அந்த காட்சியை பெண்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருக்கும்போது தான் பயமா இருந்தது.

ஒரு காட்சியில் பையன் துப்பாக்கி எடுத்து சுடுவான். உடனே ரம்யா நம்பீசன் அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்குவார். பையன் கையில் துப்பாக்கி இருக்க கூடாது என்று புரிதல் இருந்த எனக்கு அதனை அந்த பையன் கையில் கொடுக்க கூடாது என்று புரியவில்லை. ஒரு பெண்ணை பற்றி பேசும்போது அது சரியா என பத்து பெண்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பெண்களும் அரசியல் புரிதல் இருக்க கூடிய பெண்களாக இருக்க வேண்டும். என்று பேசினார்.