இளையாராஜாவுடனான பிரிவுக்கு காரணம் இதுதான் – மனம் திறந்து பேசிய வைரமுத்து
Ilaiyaraaja: என் பாடல்களை ஒலிப்பதிவு ஆகும் வரை அவர் காண்பதே இல்லை. அது என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை. பொத்தி வைத்த மல்லிகை மொட்டு என்ற பாடலில் மாலையிட காத்து அல்லி இருக்கு. தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு என்று எழுதியிருந்தேன். அதற்கு முன்பாக அவர் நாதஸ்வர இசையை அந்த இடத்தில் உருவாக்கியிருக்கிறார். அது இருவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

இளையராஜா - வைரமுத்து
இசைஞானி இளையராஜாவும் (Ilaiyaraaja) கவிப்பேரரசு வைரமுத்துவும் (Vairamuthu) இணைந்து 1980 முதல் 1986 வரை ஆகிய ஆறு ஆண்டுகள் மட்டுமே இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 200 முதல் 250 பாடல்கள் வரை அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டாலும் அவர்கள் இசையும் தமிழும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் தான் இன்று வரை ரசிகர்களை மெய் மறக்க செய்திருக்கின்றன. பொன் மாலை பொழுது தொடங்கி கடைசி பாடலாக சொல்லப்படும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் வரை அவர்கள் இணைந்து பணியாற்றிய பாடல் அனைத்தும் என்றென்றும் நிலைத்திருக்கும். இளையராஜாவின் மகன் யுவனும் (Yuvan Shankar Raja) வைரமுத்துவின் மகன் கார்கியும் முதன்முறைாக வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்துக்கு இணைந்து பணியாற்றினர். அந்தப் படத்தின் பூம் பூம் பெண்ணே என்ற பாடலில் பொன்மாலை மீண்டும் உண்டானதே… ஏதேதோ எண்ணம் வந்து மீண்டும் பூக்கின்றதே என மதன் கார்க்கி தனது அப்பா மற்றும் பிரிவையும் அவர்களது மகன்கள் இணைந்திருப்பதையும் சொல்லியிருப்பார்.
இளையாராஜாவுடனான பிரிவு குறித்து வைரமுத்து ஒரு பேட்டியில், ”இளையராஜாவுடன் ஏற்பட்ட படைப்பாற்றல் மற்றும் கருத்து முரண்பாடுகளே நாங்கள் பிரிய காரணம். என் நதிக்கரையை, எனது தென்னந்தோப்புகளை, எனது பழைய சாலைகளை, எனது கண்ணீரை, வெற்றி, தோல்விகளை மறக்க முடியாதது போல அவருடன் பணியாற்றிய காலத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த காலம் மிகவும் உன்னதமானது. வியாபார வட்டத்துக்குள் அல்லாமல் கலை என்ற பெரும் வெளிக்குள் பயணித்த காலம். என் பாடல்களை ஒலிப்பதிவு ஆகும் வரை அவர் காண்பதே இல்லை. அது என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை. பொத்தி வைத்த மல்லிகை மொட்டு என்ற பாடலில் மாலையிட காத்து அல்லி இருக்கு. தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு என்று எழுதியிருந்தேன். அதற்கு முன்பாக அவர் நாதஸ்வர இசையை அந்த இடத்தில் உருவாக்கியிருக்கிறார். அது இருவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
இளையராஜாவை பிரியக் காரணம்
என் பாடல்களில் திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தபோது நான் நகர்ந்துவிட்டேன். என் பாடலில் திருத்தமும் வருத்தமும் நேராத வரை வாழ்வும் இசையும் உச்சத்தில் இருந்தன. பிறகு மாரிவிட்டது. ஆனால் இப்போது கூட நான் அதிகம் கேட்டு அழுகிற பாடல் காதல் ஓவியம் படத்தில் வருகின்ற சங்கீத ஜாதி முல்லை என்ற பாடல்தான். அது என் திருமண நாளன்று ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல். அது வாழ்க்கையின் அபூர்வம் அது ஒரு முறை தான் நேரும் என்றார்.
இளையாராஜாவை அழிக்க முடியாது என்ற வைரமுத்து
மறைந்த நடிகர் மாரிமுத்து தான் வைரமுத்துவுடன் உதவியாளராக பணியாற்றிய காலகட்டத்தில் இளையராஜா குறித்து வைரமுத்து உணர்ச்சிமிகுதியில் பேசியதை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டிருந்தார். அதில், வார இதழில் ஒரு தொடர் எழுதி வந்தார் வைரமுத்து, ஒரு முறை இளையராஜா பற்றி அதில் எழுதும்போது கடந்த 20 வருடங்களாக தமிழ் நாட்டுக் காற்று உன் குத்தகையிலேயே இருக்கிறது என்று குறிப்பிட்டார். அப்போது பின்னணியில் இளையராஜாவின் பாடல் ஒலித்தது. அப்போது வைரமுத்து சொன்னார். அவரை அழிக்கவே முடியாது என்றார்.