டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் காதல் புரபோஸ் செய்த இயக்குநர் – வைரலாகும் வீடியோ

Tourist Family Movie Director Abishan Jeevinth: இலங்கை தமிழர்களை மையமாக வைத்து காமெடி செண்டிமெண்டுடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்க்கையில் இருக்கும் துன்பத்தை மிகவும் எளிமையாக புரியும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் காதல் புரபோஸ் செய்த இயக்குநர் - வைரலாகும் வீடியோ

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Updated On: 

27 Apr 2025 17:38 PM

நடிகர் சசிக்குமார் (Sasi Kumar) நடிப்பில் உருவாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family). இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இவர்களின் மகன்களாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், யோகி பாபு, பக்ஸ், எம்.எஸ். பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை பிரபல இயக்குநர் அட்லி 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டார். இந்த விழாவில் சசிக்குமார் மற்றும் படக்குழுவினர் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரெய்லர், கடற்கரையில் தமிழக போலீசாரால் பிடிபட்ட ஒரு இலங்கை குடும்பத்துடன் தொடங்குகிறது. விரைவில் டிரெய்லர் தமிழ்நாட்டிற்கு மாறுகிறது, அங்கு யோகி பாபு இலங்கை குடும்பத்திற்கு போலி ஆவணங்களை உருவாக்கி அடைக்கலம் தேட உதவுவதைக் காண்கிறோம். இருப்பினும், உள்ளூர் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றியமைப்பது அந்தக் குடும்பத்தினருக்கு சவாலாக இருக்கிறது.

இயக்குநர் அட்லி வெளியிட்ட ட்ரெய்லர் வீடியோ:

விரைவில் கதை ஒரு தீவிரமான திருப்பத்தை எடுக்கிறது, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த குடும்பத்தை போலீசார் தேடுகிறார்கள். மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் குறித்து தி இந்து செய்தியிடம் பேசிய நடிகர் சசிகுமார், “டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நிறைய நகைச்சுவை கலந்த கதைகள் இருக்கும், குடும்பங்களைச் சுற்றியே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இயக்குனரின் கதை சொல்லும் பாணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு திருத்தம் கூட இல்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு குடும்ப கதைகளை நினைவூட்டும், அவர்கள் அதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ:

இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். இறுதியாக ஒருவருக்கு மட்டும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் அகிலா இளங்கோவன். எனது நீண்ட நாள் தோழி என்று தெரிவித்த அவர் மேடையிலேயே அவருக்கு தனது காதலை தெரிவித்தார்.

எனக்கு எல்லா நேரத்திலும் என்னோட இருந்த நீ உன்கிட்ட என்ன சொல்றது தெரியல. இந்த இடத்தில ஒன்னு கேக்கனும் தான் தோனுது. வர அக்டோபர் மாசம் 31-ம் தேதி என்ன கல்யாணம் பன்னிப்பியா என்று கேட்டார். அந்த விழாவில் இருந்த அந்த அகிலா இளங்கோவன் என்ற பெண் அதனை கேட்டு நெகிழ்ச்சியில் கண் கலங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.