ரஜினி, கமல் நடிக்க ஆசைப்பட்ட படம் – இறுதியில் அஜித்துக்கு கிடைத்த வரலாறு!
படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களின் படத்தின் இரண்டாம் பாதி பாட்ஷா போல் இருப்பதாக கூறி நடிக்க மறுத்தார் ரஜினி. அதே போல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் என்ற படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக நடைபெறாத நிலையில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமாரும் அஜித் குமாரும் இணைந்த படம் தான் வரலாறு.

அஜித் குமார்
வில்லன் படத்தின் வெற்றிக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார்(K.S.Ravikumar) – அஜித் இணைந்த படம் வரலாறு. காட்பாதர் என தொடங்கப்பட்ட படம் பல மாற்றங்களுக்கு பிறகு வரலாறாக வெளியானது. இந்தப் படம் வெளியானதே ஒரு பெரும் வரலாறு தான். ரஜினிகாந்த்(Rajinikanth) நடிப்பில் ஜக்குபாய் படத்தை தொடங்கினார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களின் படத்தின் இரண்டாம் பாதி பாட்ஷா (Baashha) போல் இருப்பதாக கூறி நடிக்க மறுத்தார் ரஜினி. அதே போல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் என்ற படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக நடைபெறாத நிலையில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமாரும் அஜித் குமாரும் இணைந்த படம் தான் வரலாறு.
தெனாலி படத்தின்போதே வரலாறு படத்தின் கதையை கமலிடம் தெரிவித்திருக்கிறார். மதனா என்ற பெயரில் இந்தப் படத்தை எடுக்கலாம் என இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த கதையை எடுக்க வேண்டாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறார் கமல். இந்த கதை குறித்து கேள்விப்பட்ட ரஜினி கமல் வேண்டாம் என்று சொன்னால் நான் நடிக்கிறேன் என்றிருக்கிறார். இந்த நிலையில் அஜித் அந்தப் படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்ட ரஜினி, ஜக்குபாய் படத்துக்கு பதிலாக இந்தக் கதையை சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேனே என வருத்தப்பட்டதாக கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
வரலாறுக்கு பயன்பட்ட நான் கடவுள் லுக்
அப்பா சிவசங்கர், ஜீவா, விஷ்ணு என இரண்டு மகன்கள் என மூன்று வேடம் அஜித்திற்கு. பரத நாட்டியத்தின் காரணமாக நளினம் கலந்த சிவசங்கராகவும் அப்பா மீது வெறுப்பில் வில்லத்தனம் காட்டும் ஜீவாவாகவும் அப்பாவியான விஷ்ணுவாகவும் நடிப்பில் மிரட்டியிருப்பார் அஜித். சிவசங்கர் கதாப்பாத்திரத்துக்கு ஜோடியாக நதியா, மீனா, தேவயானி என பலர் பரிந்துரைக்கப்பட்டு கடைசியாக கனிகா உள்ளே வந்தார். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நின்றது. அப்பா கதாப்பாத்திரத்தின் காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாலாவின் நான் கடவுள் படத்துக்காக உடல் எடையைக் குறைத்து முடி வளர்த்திருந்தார் அஜித். ஆனால் அது வரலாறு படத்தில் 3 வேடங்களை வேறுபடுத்தி காட்ட பெரிதும் கைகொடுத்தது. வாலி, சிட்டிசன், வில்லன், அட்டகாசம் என அஜித் இரண்டு வேடங்களில் நடித்த படங்கள் பெரும் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வகையில் அஜித் 3 வேடங்களில் நடித்த வரலாறும் இடம்பெற்றது.
அஜித் மீது தயாரிப்பாளர் புகார்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வரலாறு படத்தை மீண்டும் துவங்க தயாரிப்பாளர் முன் வந்தபோது கே.எஸ்.ரவிக்குமாரும், அஜித்தும் வேறு படங்களில் பிஸியாக இருந்தனர். இதனையடுத்து தயாரிப்பாளர் இருவர் மீதும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க, இருவரையும் 10 நாட்களில் படத்தை முடித்து கொடுத்த உத்தரவிடப்பட்டிருக்கின்றனர். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி உட்பட முக்கிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்திருக்கிறது. நடிகர் அஜித் 7 நாட்கள் தொடந்து தூங்காமல் இந்தப் படத்தில் நடித்து கொடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்படி அவசர அவசரமாக படமாக்கப்பட்ட படம் தான் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
வசூலில் வரலாறு படைத்த ‘வரலாறு’
காட்பாதர் என தொடங்கிய இந்தப் படம் தமிழக அரசின் வரி சலுகை அறிவிப்பால் வரலாறு என பெயர் மாற்றப்ப்டடது. வரலாறு படம் கடந்த 2006 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அந்தப் படத்துடன் சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ, சரணின் வட்டாரம், விஜயகாந்த்தின் தர்மபுரி, சரத்குமாரின் 100வது படமான தலைமகன் ஆகியவை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் வரலாறு பெரும் வெற்றிபெற்று அந்த ஆண்டின் அதிக வசூலித்த படமாக மாறியது.