மீண்டும் சூர்யாவுடன் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்
Actress Keerthy Suresh: இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக இயக்க உள்ள 796CC படத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷை அணுகி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 796CC என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் சூர்யாவுடன் நடிக்கும் இரண்டாவது படம் ஆகும்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீமராஜா, சாமி 2, சண்டகோழி 2, சர்க்கார், அண்ணாத்த, சாணிக் காகிதம், மாமன்னன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியானது ரகு தாதா படம். இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நபராக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி 2024-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துக்கொண்டார் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு பிறகு இன்னும் தமிழில் அவரது நடிப்பில் வேறு எந்தப் படங்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரியின் 796CC என்று தற்காலிக பெயர் வைக்கப்பட்ட படத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷை படக்குழு அணுகியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் 2025-ம் ஆண்டு பாதியில் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவல் என்று இந்தியா டுடே செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தின் கதை பிடித்துள்ளது என்று கூறியதாக தெரிவித்துள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு மிகவும் வலுவான கதாப்பாத்திரம் உள்ளதாகவும் அது அவரை மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இருப்பினும், கீர்த்தி சுரேஷின் இறுதி முடிவுக்காக படக் குழு காத்திருக்கிறது என்றும் ஆனால் பேச்சுவார்த்தைகள் நிச்சயமாக முன்னேறிய நிலையில் அவர் அந்த படத்தில் நிச்சயமாக நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் சம்மதித்தால் அவர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது ஆகும்.
முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து 2018-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இவர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.