‘என் லைப்ல அப்படி சொன்ன ஒரே இயக்குநர் கமல் தான்’ – ஹேராம் பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி

மருதநாயகம் பாதியில் நின்றதால் அந்தப் படத்துக்கான பட்ஜெட்டில் ஹேராம் படத்தை எடுத்தார் கமல். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தையும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தையும் பார்வையாளர்களுக்கு தத்ரூபமாக கடத்தினார் கமல். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ராணி முகர்ஜி பேசியுள்ளார்

என் லைப்ல அப்படி சொன்ன ஒரே இயக்குநர் கமல் தான் - ஹேராம் பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி

கமல்ஹாசன் - ராணி முகர்ஜி

Published: 

18 Apr 2025 22:16 PM

இந்திய சினிமா வரலாற்றில் சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் கமல்ஹாசனின் ஹேராம் குறைந்தது முதல் 10 இடங்களில் இடம்பெறும். மகாத்மா காந்தியை (Mahatma Gandhi) கொல்வதற்காக வந்து கடைசி கட்டத்தில் மனம் திருந்தி அவரை நேசிக்கத் தொடங்கும் சாகேத் ராம் என்பவரது கதை தான் இந்த ஹேராம். காந்தி மீதான விமர்சனத்தில் தொடங்கி, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மீது ஏற்படும் வெறுப்பாக மாறி பின் அவரை நன்றாக புரிந்துகொண்டு நேசிக்கத் தொடங்கும் சாகேத் ராம் என்பவரது பயணம் தான் இந்த ஹே ராம். கடந்த பிப்ரவரி 18, 2000 ஆம் ஆண்டு வெளியான படம் இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மருதநாயகம் பாதியில் நின்றதால் அந்தப் படத்துக்கான பட்ஜெட்டில் ஹேராம் படத்தை எடுத்தார் கமல். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தையும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தையும் பார்வையாளர்களுக்கு தத்ரூபமாக கடத்தினார் கமல். அதுவரை பெரிய அரசியல் நிலைப்பாடு இல்லாத தமிழரான கமல் கொல்கத்தாவில் இந்து – முஸ்லீம் கலவரத்தில் தனது மனைவி கொல்லப்பட அதற்கு பிறகு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இந்தப் படம். படம் வெளியான போது வெற்றிபெறவில்லை. ஆனால் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு பிறகும் கொண்டடாடப்படும் படமாக இருந்து வருகிறது.

ஹேராம் படத்தை சிலாகித்து பேசிய மணிகண்டன்

நடிகர் மணிகண்டன் கூட ஒரு பேட்டியில் ஹேராம் படத்தை சிலாகித்து பேசியிருப்பார். அப்போது பேசிய அவர், கமலும் ஷாருக்கானும் ஹரப்பா நாகரிகத்தில் கால்வாயை வியந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போ மத சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம் என்பார். பின்னாளில் அதே சாகேத் ராமை இந்து மத கலவரத்தின் காரணமாக கால்வாய்க்குள் இறக்குவார்கள். சாகேத் ராமிடம் இந்து முஸ்லீம் கலவரம் குறித்து சொல்ல இன்னுமா என விரக்தியில் பேசுவார் என அவர் தெரிவித்திருந்தார்.

தொல்லியல் துறை நிபுணர்களாக சிந்து சமவெளி குறித்து ஆராய்ச்சி செய்யும்போது நண்பராக தெரிந்த அம்ஜத் கான் நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்திக்கும் போது முஸ்லீமாக தெரிவார். ”நான் எங்கே போணும் என அம்ஜத் கேட்கும் போது, “உங்கள் ஜின்னாவின் பாகிஸ்தானுக்கு போ” என சாகேத் ராம் சொல்வார். அதற்கு அம்ஜத், “நான் காந்தியின் மகன் நான் இங்கே தான் இருப்பேன் “என்பார். அடுத்த காட்சியில் இந்து அமைப்பினரிடமிருந்து அம்ஜத்தை காப்பாற்ற இது எனது சகோதரர் என்பார். அப்போது குறுக்கிடும் அம்ஜத், ஆம் நான் ராமின் சகோதரர் அம்ஜத் கான் என்பார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்த விதம் குறித்து பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் கமல். படத்துக்கு இளையராஜாவின் இசை பெரும் பலமாக அமைந்திருக்கும். இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருப்பார்.

ராணி முகர்ஜியின் ஹேராம் அனுபவம்

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ராணி முகர்ஜி, என் திரையுலக அனுபவத்தில் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்தவுடன் எனது முகத்தை கழுவிவிட்டு வர சொன்ன முதல் இயக்குநர் கமல். அவர் சொன்னது போலவே முகத்தை கழுவி விட்டு சிறிது பவுடர் போட்டு வந்தேன். அப்போது மீண்டும் முகத்தை கழுவி விட்டு வா என்றார். ஆச்சரியப்பட்டு திரும்பவும் முகத்தைக் கழுவிவிட்டு வந்தேன். அப்போது நீ தான் என் அபர்ணா என்றார். மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்க முடியும் என அன்று தான் புரிந்துகொண்டேன். மேக்கப் போட்டு தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. லைட்டிங், கேமரா ஆங்கிள், பயன்படுத்தும் லென்ஸ் ஆகியவற்றின் மூலம் நம்மை அழகாக காட்ட முடியும் என புரிந்துகொண்டேன். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.