‘அதுல பணம் வருமானு தெரியாது’ – சிவகார்த்திகேயன் பற்றி சுதா கொங்கரா கருத்து
Sudha Kongara about Sivakarthikeyan: பராசக்தி படம் தொடர்பாக இலங்கை சேனலுக்கு சுதா கொங்கரா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் தயாரித்த படங்கள் தொடர்பாக பாராட்டு தெரிவித்த அவர், அது அவருக்கு சினிமா மீதான ஆர்வத்தை காட்டுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் அவர் நடித்திருந்தார். கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரித்திருந்த அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க, வில்லனாக வித்யூத் ஜாம்வால் நடிக்கிறார். தமிழில் துப்பாக்கி படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வித்யூத் ஜாம்வால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
கனா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரானார். அந்தப் படத்தில் அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்க, மற்றொரு நண்பர் திபு நினன் தாமஸ் இசையமைக்க, இன்னொரு நண்பர் தர்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிவாவின் மகள் ஆராதனா வாயாடி பெத்தபுள்ள பாடலையும் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் அவருக்கு வெற்றிப் படமான நிலையில் அதனைத் தொடர்ந்து பிளாக்ஷீப் டீமுடன் இணைந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை அவர் தயாரித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதன் பிறகு அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான வாழ் படமும் அவருக்கு தோல்விப்படமாகவே அமைந்தது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம்
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்க கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தர்ஷன் நடிக்க ஹவுஸ் மேட்ஸ் என்ற படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
சிவகார்த்திகேயன் குறித்து சுதா கொங்கரா புகழாரம்
#sudhakongara about #Sivakarthikeyan: what i like about siva is the movies he produced might make money or they might not, but it’s only because of the love for cinema that he doing that And he has a passion to do more, to explore what else can be done in cinema pic.twitter.com/q95bNj5LDP
— VRsamy (@Veerasamy100) April 10, 2025
இதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள விரகேசரி (Virakesari) சேனலுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் சிவகார்த்திகேயன் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, ”சிவகார்த்திகேயன் சினிமா மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அதனால் தான் அவர் தயாரிக்கும் படங்கள் சிறந்த படங்களாக இருக்கின்றன. காரணம் அதில் இருந்து அவருக்கு வருமானம் வருமா? என்பது தெரியாது. பராசக்தி படத்தின் கதையை 4 வரிகள் தான் சொன்னேன். உடனே நான் நடிக்கிறேன் என்றார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவருக்கு இந்தப் படத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. அவர் மிகவும் பேஷனுடன் செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. புதிய முயற்சிகளை செய்வதில் அவர் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு சினிமா மேல் வெறி இருக்கிறது” என்றார்.