தலித் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு – பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் பா.ரஞ்சித்
Pa.Raniith Bollywood Film: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலித் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தொடர்பான விவரங்களை இந்தப் பதிவில் இருக்கலாம்.

பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித் (Pa.Ranjith) தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர். அதுவரை கமர்ஷியல் சினிமா, கலை படைப்பு என இரண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்த தமிழ் சினிமா பா.ரஞ்சித்தின் வருகைக்கு பிறகு ஒரே பாதையில் பயணிக்க துவங்கியது. கமர்ஷியல் சினிமாவை உருவாக்கும் இயக்குநர்கள் கூட தங்களது படங்கள் சமூகத்துக்கு எதிரான கருத்துகள் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டனர். இயக்குநராக மட்டுமல்லாமல் நீலம் புரொடக்சன்ஸ், நீலம் பண்பாட்டு மையம், நீலம் பதிப்பகம் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக தங்கலான் படம் வெளியாகியிருந்தது. விக்ரம் (Vikram), மாளவிகா மோகனன்(Malavika Mohanan), பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனையடுத்து தற்போது வேட்டுவம் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் பா.ரஞ்சித்
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பலூவின் (Palwankar Baloo) வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராமசந்திர குஹா எழுதிய ஏ கார்னர் ஆப் அ ஃபாரின் லேண்ட் (A Corner Of A Foreign Field) என்ற புத்தகத்தை தழுவி இந்தப் படத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த பல்வங்கர் பலூ?
தலித் சமூகத்தைச் சேர்ந்த பால்வங்கர் பலூ, புனேவில் கிரிக்கெட் மைதான பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1896ஆம் ஆண்டு இந்து ஜிம்கானா அணிக்காக விளையாடி, இந்திய கிரிக்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்தார். சாதிக்குள் இருந்த பாகுபாடு, அவருக்கு எதிரான சவால்கள் மற்றும் கிரிக்கெட்டில் அவரது போராட்டங்களை பற்றிய வாழ்க்கை வரலாறு “A Corner of a Foreign Field” என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் சினிமா மற்றும் அரசியல் அரங்கில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ், காலா என அவரது படங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் தனது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்வதில் அவர் தயங்கியதே இல்லை. தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், புளூ ஸ்டார், ஜே பேபி என தரமான படங்களைத் தமிழ் சினிமாவுக்கு அளித்திருக்கிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தை தயாரித்து வருகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் கால்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.