இரண்டு வெடி விபத்துகளில் நூலிழையில் உயிர் பிழைத்த இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ்!
இளையராஜாவின் சம காலத்தில் பயணித்த மற்றொரு பிரபல இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர் – கணேஷ்.(Shankar – Ganesh) இவர்களது பல ஹிட் பாடல்களை சிலர் தவறுதலாக இளையாராஜாவின் (Ilaiyaraaja) பாடல் என குறிப்பிடப்படுவதுண்டு. சங்கர் – கணேஷ் இருவரும் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்ற தொடங்கினர். பின்னர் கண்ணதாசன் மூலம் அவர்களுக்கு ஜெயலலிதா (Jayalalitha) நடித்த மகராசி படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. பின்னர் ஆட்டுக்கார அலமேலு என்ற படமும் அதில் இடம்பெற்ற பருத்தி […]

இளையராஜாவின் சம காலத்தில் பயணித்த மற்றொரு பிரபல இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர் – கணேஷ்.(Shankar – Ganesh) இவர்களது பல ஹிட் பாடல்களை சிலர் தவறுதலாக இளையாராஜாவின் (Ilaiyaraaja) பாடல் என குறிப்பிடப்படுவதுண்டு. சங்கர் – கணேஷ் இருவரும் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்ற தொடங்கினர். பின்னர் கண்ணதாசன் மூலம் அவர்களுக்கு ஜெயலலிதா (Jayalalitha) நடித்த மகராசி படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. பின்னர் ஆட்டுக்கார அலமேலு என்ற படமும் அதில் இடம்பெற்ற பருத்தி எடுக்கையிலே பாடலும் ஹிட்டாக அவர்களுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவர்கள் காம்போவில் சங்கர் இறந்துபோக தொடர்ந்து சங்கர் – கணேஷ் என்ற பெயரிலேயே படங்களுக்கு கணேஷ் இசையமைக்கிறார். எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன், இதய வீனை போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
கம்யூனிச மேடைகளில் ஒலித்த எரிமலை எப்படி பொறுக்கும் பாடல் !
பாக்யராஜ், விஜயகாந்த், எஸ்.ஏ.சந்திர சேகரின் ஆரம்ப கால படங்களுக்கு சங்கர் கணேஷ் இசை மூலம் உயிர் கொடுத்திருக்கிறார். ஆட்டோ ராஜா என்ற விஜயகாந்த் படத்தில் மற்ற பாடல்களுக்கு சங்கர் – கணேஷ் இசையமைக்க இடம்பெற்ற சங்கத்தில் பாடாத கவிதை பாடல் மட்டும் இளையராஜா இசையமைத்திருப்பார். மலையாளத்தில் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த ஓலங்கள் படத்தில் இடம்பெற்ற தும்பி வா பாடலை இந்தப் படத்துக்காக இளையாராஜா பயன்படுத்தியிருப்பார். அதே போல சிவப்பு மல்லி படத்தில் சங்கர் – கணேஷ் இசையில் இடம்பெற்ற எரிமலை எப்படி பொறுக்கும் பாடல் கம்யூனிச மேடைகளில் அப்போது பிரபலமாக ஒலித்தது.
இசையமைப்பாளர் கணேஷின் பின்னணி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள சங்கர் கணேஷ், மோகன் ஹீரோவாக நடித்த ஜகதலபிராதபன் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் துவங்கி, சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் என அப்போதைய முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். கணேஷ் பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனின் சகோதரர் என்பதும் பாலும் பழமும் போன்ற படங்களை தயாரித்த சி.ஆர். வேலுமணி இவரது மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மகன் பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகரான ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ கமலுடன் விக்ரம், சிவகார்த்திகேயனுடன் அமரன் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்துவருகிறார்.
இரண்டு வெடி விபத்துகளில் நூலிழையில் உயிர் பிழைத்த கணேஷ்
கடந்த 1986 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி இசையமைப்பாளர் கணேஷின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத பார்சல் ஒன்று வருகிறது. அதில் ஒரு டேப் ரிகார்டர் இருந்திருக்கிறது. இதில் தனது பாடல் இருப்பதாகவும் பிடித்திருந்தால் தனக்கு தங்களது குழுவில் கீபோர்டு இசைக்க வாய்ப்பு தருமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் அதனை இயக்க முற்பட்டிருக்கிறார். அப்போது அந்த டேப் ரிக்கார்டர் வெடித்ததில் அவரது கை மற்றும் கண் பகுதிகளில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அவர் வலது கண்ணில் பார்வையை இழந்தார். இடது கண்ணும் மங்கிய நிலையிலேயே தெரிந்திருக்கிறது. பின்னர் 2014ல் மேற்கொள்ளப்பட்ட நவீன சிகிச்சையின் மூலம் அவருக்கு கண்பார்வை திரும்ப கிடைத்திருக்கிறது.
இதே போல கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரம்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தார். அப்போது அங்கு இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் மேடை கச்சேரியில் கலந்துகொண்டிருந்தார். ராஜீவ் காந்தி வெடி விபத்தில் இறந்த போது அவர் கிட்டத்தட்ட 50 மீட்டர் இடைவேளையில் தான் இருந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் அன்று உயிர் தப்பினார்.