இத்தனை நல்ல பாடகர்கள் இருக்கும்போது AI எதுக்கு? செய்தியாளர்கள் சந்திப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்
Harris Jayaraj about AI in Music: சமீபத்தில் சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இங்கு பல பாடகர்கள் வாய்ப்பிற்காக போராடி வரும் நிலையில் இறந்தவர்களின் குரல்களை AI மூலம் நான் ஏன் மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ்
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் AI மூலம் உயிரிழந்த பாடகர்களின் குரலைப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஜனவரி மாதம் 8-ம் தேதி 1975-ம் ஆண்டு பிறந்தவர்தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது தந்தை சினிமாவில் கிட்டாரிஸ்டாக இருந்த நிலையில் இசையை முறையாகக் கற்றுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் தான் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடதக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் மாதவன் மற்றும் ரீமா சென் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதில் நடிகை ரீமா சென் அறிமுக காட்சிக்கு வரும் பின்னணி இசை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதே ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு மற்றும் ஷ்யாம் நடிப்பில் வெளியான 12பி ஆகிய படங்களில் வந்த பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தின் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. தொடர்ந்து லேசா லேசா, சாமி, கோவில் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் தமிழ் ரசிகர்கள் ஹாரிஸ் மாம்ஸ் வைப்ஸ் என்று செல்லமாக கூறும் அளவிற்கு காதல், காதல் தோல்வி, கோபம், ஃபேமிலி செண்டிமெண்ட் என அனைத்து விதமான எமோஷன்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் நடிகர்கள் கமல் ஹாசன், விஜய், விக்ரம், மாதவன், சிம்பு, சூர்யா, சரத்குமார், ரவி மோகன் என பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் வீடியோ:
Respect 🫡 #HarrisJayaraj : There are a lot of singers and talents out there waiting for an opportunity. I won’t replace singers with AI or bring late singers back using AIpic.twitter.com/5jOnhcnaI3
— MovieCrow (@MovieCrow) April 14, 2025
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் AI பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு இசையமைப்பளர் வெளிப்படையாக பேசினார். அப்போது இங்கு பாடகர்கள் பலர் இருக்கிறார்கள் நான் ஏன் AI பயன்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக பேசினார்.
மேலும் பாடகர்கள் பலர் வாய்ப்புக்காக இங்கு காத்திருக்கும் நிலையில் AI மூலம் உயிரிழந்தவர்களின் குரல்களை ஏன் பயன்படுத்த வேண்டும். மறைந்த பாடகர்கள் தங்களது திறமை மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் வாய்ப்புக்காக போராடும் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே நல்லது.
தொடர்ந்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் படங்களை விட இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு நான் ஒரு அடித்தளம் இட்டேன் என்பது பெருமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.