ஹோட்டலில் இருந்து தப்பிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது – போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம்!

Shine Tom Chacko: காவல்துறையினரின் சோதனையின் போது ஹோட்டலில் இருந்து தப்பி ஓடிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டலில் இருந்து தப்பிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது - போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம்!

ஷைன் டாம் சாக்கோ

Published: 

19 Apr 2025 16:05 PM

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி (Good Bad Ugly) போன்ற படங்களில் நடித்திருந்தவர் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko). இந்த நிலையில் சூத்ரவாக்கியம் என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஷைன் டாம் சாக்கோ போதையில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை வின்சி அலோஷியஸ் என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். மேலும் காவல் நிலையத்திலும் ஷைன் டாம் சக்கோ மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் தொடர்பாக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது 3வது மாடியில் தான் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக டாம் சக்கோ தப்பி ஓடியிருக்கிறார். இதனையடுத்து ஹோட்டலின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஷைன் டாம் சக்கோ தப்பி ஓடியதை காவல் துறையினர் உறுதி செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 48 மணி நேரத்துக்கு பிறகு ஏப்ரல் 19, 2025  அன்று காலை 10.15 மணிக்கு எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஷைன் டாம் சக்கோ ஆஜரானார்.  அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர்.

ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு

அவரை NDPS சட்டத்தின் பிரிவுகள் 27 மற்றும் 29(1) கீழ்  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் அவரால் ஜாமீனில் வெளியே வர முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.  போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய சஜீர் என்பவருக்கும் நடிகர் ஷைனுக்கும் பழக்கம் இருந்ததாகவும் அவருக்கு நிதி உதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசாரணையின் போது ஷைன் தங்களிடம் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நடிகர் ஷைன் காவல்துறையினரிடம்,  தனக்கு பொருளாதார ரீதியாக எதிரிகள் இருப்பதாகவும், தனக்கு  அவர்கள் ஆபத்து ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தன்னை ஒரு சிலர் தாக்க வருவதாகவும் அதற்கு பயந்தே ஹோட்டலில் இருந்து தப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர்கள் யார், நடிகர் ஷைனை அவர்கள் ஏன் தேடுகிறார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை வின்சியின் பரபரப்பு குற்றச்சாட்டு

 

நடிகை வின்சி அல்சியோஸ் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு காட்சியின் போது அவரது வாயிலில் இருந்து வெள்ளை பவுடர் போல ஏதோ ஒன்று மேஜையில் விழுந்தது. அது அவர் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்தது. இது அருகிலிருந்த அனைவருக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் விஷயம். ஆனால் அது உங்கள் சுற்றியுள்ளவர்களையும், பணி சூழலையும் பாதிக்கும்போது, அது ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறிவிடுகிறது” என பதிவிட்டார்.