Yugabharathi: இந்த இரண்டு பாட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றும் பின்னணியில் மிகப்பெரிய அளவிலான சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது. இப்படிப்பட்ட பாடலை கேட்கும்போது அதன் பின்னணியில் எடுக்கப்படும் மெனக்கெடல்கள் தெரியாமலேயே போய் விடுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம். கவிஞர் யுகபாரதி தன்னுடைய ஒரு பாடலை பற்றி சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.

Yugabharathi: இந்த இரண்டு பாட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி vs மதுர

Published: 

22 Apr 2025 17:31 PM

தமிழ் சினிமாவில் சம கால பாடலாசியர்களில் முன்னணியில் இருப்பவர் யுகபாரதி (Yugabharathi). 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் மூலம் அறிமுகமாகி பட்டித்தொட்டியெங்கும் தன்னுடைய வரிகளால் பிரபலமானவர். கிட்டதட்ட 24 ஆண்டுகளாக சினிமாவில் பாடலாசிரியராக ஜொலித்து வரும் அவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடல் உருவான விதத்தைப் பற்றி சுவாரஸ்யமாக பேசியிருப்பார். அந்த வகையில் விஜய் (Thalapathy Vijay) நடித்த ‘மதுர’ மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) நடித்த ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ ஆகிய 2 படங்களிலும் இடம் பெற்ற பாடல் ஒன்றை பற்றி பேசியதை காணலாம்.

அதாவது, “ எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ என்ற பாடல் உள்ளது. இந்தப் பாட்டுக்கு நான் முதலில் எழுதிய பல்லவி “கண்டேன் கண்டேன் உன் காதல் நான் கண்டேன்.. உன்னை கண்ட நேரத்தில் எதிர்காலம் நான் கண்டேன்” என்பதாகும். இதனை படித்துப் பார்த்த அப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா, ‘சார் ரொம்ப இலக்கியமாக இருக்கிறது’ என சொன்னார்.

அதற்கு நான், ‘கண்டேன் நான் கண்டேன் என்பது இலக்கியமா?’ என திருப்பி கேட்டேன். உடனே மோகன் ராஜா என்னிடம்,  ‘ஆமாம். ரொம்ப இலக்கியமாக இருக்கிறது. எனக்கு ட்ரெண்டியாக ஒரு பாடல் வேண்டும்’ என தெரிவித்தார். அந்தப் பாடலை இப்போது கேட்டால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். முதலில் நான் எழுதிய கண்டேன்.. கண்டேன் என எழுதிய பல்லவியில் அந்த கண்டேன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஐயோ.. ஐயோ.. ஐயோ.. என கடுப்பாகி வார்த்தைகளை நிரப்பி விட்டேன்.

இந்த வார்த்தைகளை கேட்டு விட்டு பாடல் செம ட்ரெண்டியாக உள்ளதாக மோகன் ராஜா தெரிவித்தார். இதைவிட பெரிய காமெடி என்னவென்று கேட்டால் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதன் பிறகு படம் ரிலீசானதும் மோகன் ராஜா என்னை அழைத்து, ‘நான் அவ்வளவு தூரம் சொன்னேன்..பார்த்தீர்களா பாடல் ஹிட் ஆகிவிட்டது’ என தெரிவித்தார்.

இதற்கிடையில் நான் எழுதிய கண்டேன் கண்டேன் பாடலை இன்னொரு படத்திற்காக கொடுத்து அங்கேயும் அந்தப் பாடல் இடம் பெற்றது. அது விஜய் நடித்த மதுர திரைப்படத்தில் இடம் பெற்ற கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் என்ற பாடல் தான்” என யுக பாரதி தெரிவித்து இருப்பார்.

மதுர Vs எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான படம் மதுர. மாதேஷ் இயக்கிய இந்த படத்தில் சோனியா அகர்வால், ரக்ஷிதா, வடிவேலு, பசுபதி, சீதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அதே 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற படம் ரீமேக் செய்யப்பட்டு ரவி மோகன் நடிப்பில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆக வெளியானது. இந்தப் படத்தில் அசின், நதியா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.