ஜூராசிக் பார்க்கை விட அதிக விஎஃப்எக்ஸ் – ‘ஜீன்ஸ்’ படத்தில் ஷங்கர் பண்ண சம்பவம்

Jeans Movie : ஜீன்ஸ் படத்தின் பாடல்களும் அது படமாக்கப்பட்ட விதமும் நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்தது. இந்தப் படத்தின் வாராய தோழி என்ற பாடல் அமெரிக்காவில் உள்ள யூனிவர்சல் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டிருக்கிறது. அங்கு படமாக்கப்பட்ட ஒரே இந்திய படம் ஜீன்ஸ் மட்டும் தான்.

ஜூராசிக் பார்க்கை விட அதிக விஎஃப்எக்ஸ் - ஜீன்ஸ் படத்தில் ஷங்கர் பண்ண சம்பவம்

ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் - ஐஸ்வர்யா ராய்

Published: 

18 Apr 2025 19:53 PM

ஜென்டிமேன், காதலன், இந்தியன் (Indian) என தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ஷங்கர் (Shankar). அடுத்ததாக இவர் இயக்கிய படம் தான் ஜீன்ஸ்(Jeans). இந்தப் படம் கடந்த ஏப்ரல் 24, 1998ல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்திலேயே இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.20 கோடி என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இரட்டையர்களைப் பற்றிய படம். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஷங்கருக்கு முதல் சாய்ஸ் அஜித் குமார். அந்த நேரத்தில் அஜித் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஜீன்ஸ் நீண்ட கால தயாரிப்பில் உருவாகும் படம் என்பதால் கால்ஷீட் பிரச்னையால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக பிரசாந்த் நடித்தார். பிரசாந்த்தின் திரையுலக வாழ்க்கையில் டாப் 10 படங்களை எடுத்துக்கொண்டால் ஜீன்ஸ் மிக முக்கிய இடத்தை பிடிக்கும்.

நாச்சியப்பனும் பேச்சியப்பனும் இரட்டையர்கள். காரைக்குடியில் ஹோட்டலில் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பேச்சியப்பனின் மனைவியின் நடத்தையால் இருவரும் பிரிய நேர்கிறது. நாச்சியப்பனுக்கு இரட்டைக் குழந்தைகள். தனது மகன்களுக்கு இரட்டையர்களை திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். காரணம் தனது மகன்களுக்கு வரும் மனைவி இரட்டையர்களாக இருந்தால் இருவரும் புரிந்துகொண்டு வாழ்வார்கள். தனது மகன்கள் கடைசி வரை பிரியாமல் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் கருதுகிறார். இந்த நிலையில் பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அப்போது ஐஸ்வர்யா ராயின் பாட்டியான லட்சுமிக்கு நாச்சியப்பனின் கண்டிசன் குறித்து தெரிய வர தனது பேத்திகளும் இரட்டையர்கள் தான் என பொய் சொல்ல அதன் பிறகு காமெடி கலாட்டாக்களே இந்தப் படம்.

ஸ்ரீதேவிக்கு நடந்த உண்மை சம்பவம்

இந்தப் படத்தில் நடிகை லட்சுமிக்கு அமெரிக்க மருத்துவமனையில் தவறுதலாக மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்படும். இது நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க வாழ் இந்தியரான அசோக் அமிதர்தராஜ் தயாரித்த ஒரே தமிழ் படம் ஜீன்ஸ். பின்னாளில் இவர் ரஜினிகாந்த் நடித்த ஹாலிவுட் படமான பிளட் ஸ்டோன் (Blood Stone) படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள் உருவான விதம்

அந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் பாடல்களும் அது படமாக்கப்பட்ட விதமும் நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்தது. இந்தப் படத்தின் வாராயோ தோழி என்ற பாடல் அமெரிக்காவில் உள்ள யூனிவர்சல் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டிருக்கிறது. அங்கு படமாக்கப்பட்ட ஒரே இந்திய படம் ஜீன்ஸ் மட்டும் தான். அதே போல கடந்த 1998 ஆம் ஆண்டிலேயே இந்திய படங்களில் அதிக விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும், குறிப்பாக கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் விஎஃப்எக்ஸ் துணை கொண்டு இரண்டு ஐஸ்வர்யா ராய் ஆடுவதாக காட்சியமைத்து மிரட்டியிருப்பார்கள். இது ஜூராஸிக் பார்க் படத்தில் வரும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கான கால அளவை விட அதிகம்.

அதே போல பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலில் உலகின் அதிசயங்கள் காட்டப்படும். அப்போது அந்த பகுதிகளில் வாழ்ந்த ராணிகளின் ஸ்டைலில் ஐஸ்வர்யா ராய் உடையணிந்திருப்பார். அதே போல இந்தப் படத்தில் நாசர் கதாப்பாத்திரத்துக்கு பதிலாக முதலில் கவுண்டமணி நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் நாசர் மெச்சூர்டான நாச்சியப்பன், அப்பாவியான பேச்சியப்பன் என இரண்டு வேடங்களில் மிரட்டியிருப்பார். இருவர் படத்தின் மூலம் நடிகையான அறிமுகமான ஐஸ்வர்யா ராய்க்கு ஜீன்ஸ் பிரம்மாண்டமான படமாக அமைந்தது.